திமுக - நாதக அநாகரிக அரசியல் மோதல்!

பின்னணியில் உள்ள நுண் அரசியல் என்ன?
திமுக - நாதக அநாகரிக அரசியல் மோதல்!
காலணியைத் தூக்கிக் காட்டும் சீமான்...

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் திமுக - நாம் தமிழர் கட்சி மோதல்தான். திமுகவை தீவிரமாக விமர்சித்து பொதுமேடையில் சீமான் கழற்றிக் காட்டிய காலணியும், அதைத் தொடர்ந்து தருமபுரியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் மேடையேறி திமுகவினர் நடத்திய தாக்குதலும் இரு கட்சி தொண்டர்களையும் சமூக ஊடகங்களில் கொதிநிலைக்குத் தள்ளியிருக்கிறது.

நாம் தமிழர் தம்பிகளின் ஆவேசங்களுக்கும் திமுக உடன்பிறப்புகளின் பதிலடிக்கும் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

எப்போதுமே மேடையில் ஆவேசமாக முழங்கும் சீமான், டிசம்பர் 15 அன்று சென்னையில் நடந்தக் கூட்டத்தில், “திமுகதான் உண்மையான சங்கி” என்று காட்டமாக விமர்சித்து காலணியைக் கழற்றிக் காட்டியது, திமுக - நாதக மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. இதனால், சீமான் மீது திமுகவினர் மிகுந்த கோபத்தில் இருந்தனர். சீமான் மீது வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அளவுக்கு உடன்பிறப்புகள் கண் சிவந்தனர். அதன் தொடர்ச்சியாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பாணியில் தம்பிகளும் பேச, ‘பழைய பன்னீர்செல்வ’மாக எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாம் தமிழர் கட்சியினர் ஆரோக்கியமான விமர்சனங்களைத் தாண்டி, தனி நபர் விமர்சனத்தை முன்னெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். இதன் தாக்கம்தான் கருணாநிதியையும், ஸ்டாலினையும் அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சித்த ‘சாட்டை’ துரைமுருகன் மீது, அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும், 30 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்லித்தான் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது நாதக. ஆனால் அந்த அஜெண்டாவைத் தாண்டி, தமிழக முதல்வரை ஒருமையில் தம்பிகள் சிலர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் திமுகவினரின் மேடையேறிய வைபவமும் நடந்திருக்கிறது.

மேடையில் மோதல்...
மேடையில் மோதல்...

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திமுக - நாதக தொண்டர்கள் அமைதிகொள்ளவில்லை. மேடைச் சண்டையை சமூக ஊடகங்களில் தொடர்கிறார்கள். இருதரப்பும் சமூக ஊடகங்களில் மாறி மாறி ஹாஷ்டாக்குகளை உருவாக்கி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கூடாரம் காலியாகிவிடும் என்ற அர்த்தத்தில், திமுகவினர் ஒரு ஹாஷ்டாக்கை உருவாக்கி வெளியிட்டனர். பதிலுக்கு திமுகவை விமர்சிக்கும் வகையில், கடுமையான அர்த்தம் கொண்ட ஹாஷ்டாக்கை நாம் தமிழர் தம்பிகள் உருவாக்கி உலவவிட்டனர். இந்த ஹாஷ்டாக்குகளில் இருதரப்பும் மாறி மாறி பதிவிட்டு மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சமூக ஊடகம் களேபரமாகிக் கிடக்கிறது. இதற்கிடையே நாதகவின் கூட்டத்தில் மேடையேறி உடன்பிறப்புகள் நடத்திய தாக்குதல், ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.

ஓபிஎஸ், ஈபிஎஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் இந்த மோதலை விமர்சித்தார். இதையடுத்து திமுகவினர் கோபம் கொள்ளும் வகையில், நாம் தமிழர் தம்பிகள் ஆபாசமாகவும் அருவெறுக்கத்தக்க வகையில் என்னென்ன பேசியிருக்கிறார்கள் என்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வரிசைக் கட்டத் தொடங்கியிருக்கின்றன. பதிலுக்கு திமுகவினர் மீதான புகார்கள், வழக்குகள் எனப் பலவற்றையும் நாம் தமிழர் கட்சியினரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வர, இன்னும் சண்டை சச்சரவு முடிவுக்கு வரவில்லை. கோவையில், சீமான் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினரை, போலீஸ் கைதுசெய்யுமளவுக்குப் போயிருக்கிறது களேபரம்.

கோவையில் சீமான் ஆர்ப்பாட்டம்...
கோவையில் சீமான் ஆர்ப்பாட்டம்...

இந்த விஷயத்தில் ஆளுங்கட்சியான திமுகவை வம்புக்கு இழுத்து சண்டைபோட வைப்பது, இஸ்லாமியர்களை இனிமேலும் திமுகவை ஆதரிக்கவிடாமல் தடுப்பது, ஆளுங்கட்சியினர் மீது ரவுடியிசம் என்ற முத்திரையைக் குத்த முயற்சிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, நாதகவினர் முயற்சிப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். நாதக செயல்பாடுகளின் பின்னணியில் இதுபோன்ற அம்சங்கள் எல்லாம் இருக்கின்றனவா?

கோவையில் திமுகவினர் கைது...
கோவையில் திமுகவினர் கைது...

இதுதொடர்பாக, முன்பு நாதகவில் இருந்தவரும் தற்போது திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக இருப்பவருமான ராஜீவ் காந்தியிடம் பேசினோம். “திராவிட கருத்தியலுக்கு எதிராகத் தொடங்கப்பட்டது அல்ல நாம் தமிழர் கட்சி. ஈழ இனப்படுகொலை, ஊழல் எதிர்ப்பு போன்றவற்றை மையப்படுத்திதான் தொடங்கப்பட்டது. நாளடைவில் சமூக நீதி, பெரியாருக்கு எதிர்ப்பு என்று மருவிய பிறகு அங்கிருந்து பலர் வெளியேறினோம். தனி நபரை சுலபமாக விமர்சிக்கலாம், அவர்கள் வாழ்க்கையைக் களங்கப்படுத்தலாம், அவதூறு செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம் உள்ளவர்தான் சீமான். அதை அங்குள்ள சிலரும் அப்படியே பின்பற்றுகிறார்கள். அதுதான் அந்தக் கட்சியில் உள்ள சிக்கல்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் தேவைதான். ஆனால், அதன் எல்லை எது? கலகம் விளைவிக்காமல் பேச வேண்டும் என்றுதான் கூட்டம்போட அனுமதி தருகிறார்கள். ஆனால், மேடையில் ‘கருவறுப்போம்’ என்று பேசுவதையும் ‘தொட்டுப் பார்’ என்று எமோஷனலைத் தூண்டிவிடுவதையும் ஒரு திட்டமாகச் செய்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு அடித்துவிட்டால் ஆளுங்கட்சியினர் அடிக்கிறார்கள் என்று பரப்ப அது வசதியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அதுதான் நாதகவின் நோக்கம்.

இஸ்லாமியர்கள் விடுதலை பற்றி இப்போது பேசுகிறார்கள் அல்லவா? கடந்த 10 ஆண்டுகளில் எங்கேயாவது பேசியிருக்கிறார்களா என்று பாருங்கள். எந்தத் தரவும் கிடையாது. இதையெல்லாம் திட்டமிட்டு இப்போது செய்கிறார்கள். ‘திமுகவை எதிர்க்கும் ஆண்மையுள்ளவர்கள் நாங்கள்தான்’ என்று அன்பார்லிமென்ட் வார்த்தையை நாதகவினர் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கலாம். திமுகவுக்கு எதிராக நாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்ற ஒரு நிலையை உருவாக்கத்தான் இப்படியெல்லாம் முயற்சிக்கிறார்கள்.

கடந்த சில தேர்தல்களில், திமுகவுக்கு தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தொடர்ந்து வாக்களித்து வருவதை சிதைக்க வேண்டும் என்பதும் நாதகவின் திட்டம்தான். அண்மையில், தாய் மதம் திரும்புங்கள் என்று சீமான் பேசியது சிறுபான்மையினர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள இஸ்லாமியர் விடுதலை என்பதைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றார் அவர்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக - அதிமுக என்பதுதான் அரசியல் களமாக உள்ளது. அதை திமுக - பாஜக ஆக்க வேண்டும் என்ற ஆசையில் பாஜகவும் செயல்பட்டு வருகிறது. திமுக தரப்பு வாதத்தை வைத்துப் பார்க்கையில், திமுக - நாதக என்ற நிலை ஏற்பட வேண்டும் நாதகவினர் விரும்புவதும் தெரிகிறது. அதற்காகத்தான் இந்த களேபரங்கள் நடக்கின்றனவா?

இதுதொடர்பாக நாதக மருத்துவர் அணியின் தலைவர் டாக்டர் ஆர். கார்த்திகேயனிடம் பேசினோம். “திமுகவின் விளம்பர அரசியலை நாங்கள் மேடையில் பேசுவதால், திமுகவுக்கு ஆத்திரம். யார் எதிர்த்துப் பேசுவார்களோ அவர்களை அடக்குவது பாஜக பழக்கம். அதையேதான் திமுகவும் இங்கு செய்கிறது.

திமுகவினர், அதன் ஆதரவாளர்கள் என யாருடைய வீடியோவையும் பாருங்கள். சீமான் மீதுதான் தனிமனித தாக்குதல் நடத்தியிருப்பார்கள். நாதகவில் அதிகாரபூர்வமாக பதவியில் இருப்போர் எந்த இடத்திலும் தனிமனித தாக்குதல் நடத்துவதில்லை. திமுகவினர் தனிமனித தாக்குதல் நடத்திப் பேசியதை எங்களால் பட்டியலிட முடியும். எனவே, திமுக எங்களுக்கு மேடை நாகரிகத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டாம்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

கருவறுப்போம் என்பது தனி மனிதரையோ ஒரு குடும்பத்தையோ வேரோடும் வேரடி மண்ணோடு சாய்ப்போம் என்று அர்த்தம் அல்ல. திராவிட சித்தாந்தத்தை சாய்ப்போம் என்பதுதான். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. பாஜக இங்கு செயல்பட சித்தாந்தமோ கொள்கையோ அவர்களுக்குக் கிடையாது. இங்கு திமுகவை எதிர்க்கக் கூடிய திராணி உள்ள கட்சியாகவும் ஊழல் புகார்கள் எதுவும் இல்லாத கட்சியாகவும் நாதகதான் உள்ளது. இதையொட்டி நாங்கள் தொடுக்கும் கேள்விகளுக்கு திமுகவால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால்தான் எங்களை பாஜகவின் ‘பி டீம்’ என்று அவதூறு பரப்புகிறார்கள்.

‘வாதத்தில் வெல்ல முடியாவிட்டால் அவதூறு பரப்புவார்கள். அதிலும் வெல்ல முடியாவிட்டால் வன்முறையில் இறங்குவார்கள்’ என்று அண்ணன் சீமான் சொல்வார். அதைத்தான் இப்போது செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திமுக தன்னுடைய உண்மையான முகத்தை வெளியே காட்டத் தொடங்கியிருக்கிறது. பேசிப் பேசியே வளர்ந்து ஒரு கட்சிக்கு, இன்று எதிர்த்துப் பேசுவதற்கு வக்கில்லாமல் போய்விட்டது. இஸ்லாமியர்கள் வாக்குகளை வாங்கி அவர்களை திமுக ஏமாற்றுவதாக நாங்கள் சொல்கிறோம். நீங்கள் மேடை போட்டு அது இல்லை என்று நிரூபியுங்கள். நாங்கள் சொல்வதை இஸ்லாமியர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டதால், எங்களைத் திமுகவினர் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக நாங்கள் அடங்கி ஒடுங்கிப் போகமாட்டோம். இன்னும் வீரியமாகச் செயல்படுவோம்” என்றார் அவர்.

மேடையிலேயே ஒரு தலைவர் காலணியைக் கழற்றிக் காட்டுவது, ஒரு கட்சியின் மேடையில் ஏறி ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்துவது போன்றவை தமிழக அரசியல் களத்தில் புதிய காட்சிகளாக மாறியிருக்கின்றன. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதே அனைவரது ஆசையும்.

‘யாகாவாராயினும் நா காக்க...’ என்பது போல ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ம் அரசியல் கட்சிகளுக்கு என்றென்றும் தேவை!

Related Stories

No stories found.