முடக்கப்பட்டது மாநிலங்களவை: திமுக, திரிணமூல், காங்கிரஸ் எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

முடக்கப்பட்டது மாநிலங்களவை: திமுக, திரிணமூல், காங்கிரஸ் எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ரம்யா ஹரிதாஸ், டி.என் பிரதாப் ஆகிய நான்கு மக்களவை உறுப்பினர்கள் மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்திருந்தார். “சபாநாயகர் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நிலையில் இல்லை. அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைச் செய்யக் கூடிய நிலையில்தான் சபாநாயகர் இருக்கிறார். அடுத்ததாக திமுக எம்பிக்களையும் இடைநீக்கம் செய்வார்கள்” என டி.ஆர். பாலு தனது கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார்.

இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில், திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷை முற்றுகையிட்டு, பதாகைகளை ஏந்தி தொடர் முழக்கங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இதையடுத்து கனிமொழி என்.வி.என் சோமு, கல்யாண சுந்தரம், அப்துல்லா, சண்முகம், என்.ஆர். இளங்கோ, கிரிராஜன், சுஷ்மிதா தேவ், டோலாசென் உள்ளிட்ட 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விதி எண் 256ன் கீழ் தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால், அவை நடவடிக்கைகள் முடங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in