
திமுக எம்பியான திருச்சி சிவாவின் வீட்டில் இன்று காலை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் பின்னணியில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் இருப்பதாக தகவல் வெளியானதில், நேரு - சிவா ஆதரவாளர்கள் இடையே திருச்சியில் பதற்றம் எழுந்துள்ளது.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலையில், திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திறந்து வைத்தார். அந்த வகையில் திருச்சி ராஜா காலனி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் ஒன்றையும் திறந்து வைக்க வருகை தந்தார்.
இதே பகுதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் டென்னிஸ் மைதான திறப்பு விழாவுக்கு திருச்சி சிவா அழைக்கப்படவில்லை என்றும், திறப்பு விழா கல்வெட்டில் சிவா பெயர் இல்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இது தொடர்பாக அமைச்சர் நேருவின் காரை மறித்து விளக்கம் கேட்க முயன்றனர்.
இது தொடர்பாக சிவா - நேரு என, இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியில் வாக்குவாதம் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி சிவா வீட்டுக்கு விரைந்த சிலர், கற்களால் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீட்டில் முகப்பில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமாயின.
விரைந்து வந்த போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியதோடு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சில நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆளும்கட்சியான திமுகவின் மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் இடையிலான மோதலும், கல்வீச்சுத் தாக்குதலும் திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.