`எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார் என்.ஆர்.இளங்கோ?'

முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா இரங்கல்
`எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார் என்.ஆர்.இளங்கோ?'

புதுச்சேரியில் இருந்து சென்னைக்குத் திரும்பும் வழியில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நடந்த விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மறைவுக்கு திமுகவினர் மட்டுமின்றி, பல்வேறு அமைப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

தமிழ் கல்வெட்டுகளை மைசூரில் இருந்து தமிழ்நாடு கொண்டுவருவதற்கான தீர்ப்பைப் பெறுவதற்கு உழைத்தவர் என்ற முறையில் என்.ஆர்.இளங்கோவுக்கு தென்மாவட்ட வழக்கறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல பெயர் இருக்கிறது. எனவே, அவர்கள் இளங்கோவின் மகன் மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் செய்தியைப் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில், "கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும், உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் இளங்கோவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சக எம்பியும், திமுக மூத்த நிர்வாகியுமான திருச்சி சிவா தனது இரங்கல் செய்தியில், ``மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை சகாவுமான ஆருயிர் இளவல் என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்பு மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிர் இழந்தார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி காலையில் இடியாய் செவியில் விழுந்தது. எனக்கு நன்கு தெரியும் அந்த செல்வனை! அறிவுக் கூர்மையும், துடிப்பும் அடக்கமும் ஒரு சேரப் பெற்ற நல்ல பிள்ளை! அவர் தந்தையைப் போலவே புகழ்மிக்க வழக்கறிஞராக பிரகாசிக்கக் கூடியவர் என்பதை பல நேரங்களில் பேச நேர்ந்தபோது உணர்ந்திருக்கிறேன். போக வேண்டிய வயதா இது? எத்தனை கனவுகள் அவருக்கும், அவரைப் பெற்றவர்களுக்கும் இருந்திருக்கும். எல்லாம் அவர் பயணம் செய்த வாகனத்தைப் போலவே தூள் தூளாகி விட்டனவே’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில், ‘ஏன் இப்படி நடந்தது என்று இப்போது பேசுவதில் பயனேதும் இல்லை. மிகக் கொடும் குணம் கொண்டவருக்குக் கூட நடக்கக் கூடாத இந்த நிகழ்வு, பொருளும் பலனும் கருதாமல் எல்லோர்க்கும் உதவும் குணம் கொண்ட என்.ஆர்.இளங்கோவுக்கா? எனக்கு கவலையெல்லாம் அவரும், அவர் மனைவியும் எப்படி இதைத் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான். வார்த்தைகள் இல்லை தேற்றுவதற்கு! இளங்கோ மனம் துவளாமல் இருக்கும் வகையில் பக்கம் நின்று பலம் தருவதைத் தவிர!'' என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in