‘வாரிசு அரசியலை நோக்கிச் செல்லும் திமுக’ - தமிழிசை விமர்சனம்

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

“திமுக வாரிசு அரசியலை நோக்கிச் செல்வதாக மக்கள் நினைக்கிறார்கள்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்திருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக, இன்று போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். பொதுச்செயலாளராக துரைமுருகன் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர்களாக கனிமொழி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்வாகியிருக்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு பெண் உயர்வான இடத்திற்கு வருவது மிகவும் சிரமமான விஷயம்தான். அந்த இடத்திற்கு வந்திருக்கும் கனிமொழிக்கு வாழ்த்துகள். அதேநேரம் இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணன் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இப்படி வரும்போது வாரிசு அரசியல் எனப் பலரும் நினைக்கக்கூடும். எப்படி இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துகள்” என்றார்.

மேலும், “திருவள்ளுவரை ஆன்மிகவாதியாகப் பலர் நம்புகிறார்கள். அவர் அப்படித்தான் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படி பேசியிருக்கலாம். ராஜ ராஜ சோழனின் வரலாறும் மறைக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி ஒரு நோக்கத்துடன் திருக்குறளைப் படிக்கவும், ஆராயவும் செய்கிறார். அதை நாம் மதிக்க வேண்டும்” என்று தமிழிசை கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in