‘பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்கள்’!: ஆளுநரை இடித்துரைக்கும் முரசொலி

‘பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்கள்’!: ஆளுநரை இடித்துரைக்கும் முரசொலி

’பிரிட்டிஷாரைத் திட்டிக்கொண்டே பிரிட்டிஷ் பாணி கவர்னர் ஜெனரலாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள்’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இடித்துரைத்து இன்றைய(நவ.14) முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. இதில் வெளிப்பட்டிருக்கும் கூர்மை மற்றும் தகிப்பு ஆகியவை திமுக அரசுக்கும் தமிழக கவனருக்கும் இடையிலான உரசலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட அறுவரின் விடுதலையை அண்மையில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவர்களின் விடுதலைக்காக 2018ஆம் ஆண்டே தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்காது ஆளுநர் தாமதப்படுத்திய நிலையில் அரிதான முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்தது. முந்தைய பேரறிவாளன் மற்றும் தற்போதைய 6 பேர் விடுதலைக்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், அந்த எழுவருக்கும் அப்பால் தமிழக ஆளுநருக்கு எதிரான அஸ்திரமாகவும் திமுகவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புகள் ‘அரசியல் சாசன பிரிவு 161ன் படி மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்’ என்பதையே வலியுறுத்துவதாக முரசொலி தலையங்கம் தாக்கியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமன்றி கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளும் அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அமைச்சரவை அனுப்பிய தீர்மானங்களை உரிய முடிவெடுக்காது ஆளுநர்கள் கிடப்பில் போடுவதாக இந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இந்த பிரச்சினையில் ஆளுநருக்கு எதிராக களமாட அறுவர் விடுதலை விவகாரம் வசமான வாய்ப்பை திமுகவுக்கு நல்கியிருக்கிறது. நீட், பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்டவை தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானங்களில் ஆளுநர் உரிய முடிவெடுக்காது இழுத்தடிப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. எதிர்காலத்திலும் அமைச்சரவை தீர்மானங்களின் மீது ஆளுநரின் கிடப்பில் போக்கு தொடரலாம் என்பதால், கிடைத்த வாய்ப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுக இடித்துரைக்கிறது. அரசியலமைப்பு சாசனம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆகிய புதிய அஸ்திரங்களுடன் ஆளுநர் மீது பாய்ந்துள்ளது.

’மாநில அரசின் 161ஆவது பிரிவின் உரிமையைக் காக்க உச்ச நீதிமன்றம் 142வது பிரிவை பயன்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக முடிவெடுக்க ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை என்பதையே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது’ என்றதோடு, பாஜகவின் நிலைப்பாடுகளில் நின்றே அதன் நியமன ஆளுநரை தாக்கவும் இந்த வாய்ப்பை முரசொலி பயன்படுத்திக் கொண்டுள்ளது. பாஜகவின் எட்டாண்டு ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் நேருவுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிக பழிக்கு ஆளாகி இருக்கிறார்கள். அந்த வகையில் ‘பிரிட்டிஷாரைத் திட்டிக்கொண்டே பிரிட்டிஷ் பாணியில் கவர்னர் ஜெனரலாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள் படிக்க வேண்டிய பாடங்கள்’ என்றும் சாடியிருக்கிறது முரசொலி தலையங்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in