100 கிடாக்கள்; 1,300 கிலோ கறி: மொய் விருந்தில் 10 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்த திமுக எம்எல்ஏ

உணவு பரிமாறப் படுகிறது
உணவு பரிமாறப் படுகிறது

பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடத்திய மொய் விருந்தில் பத்து கோடி ரூபாய் வசூலாகி மொய் விருந்து வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.

பொதுவாக புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில்தான் மொய்விருந்து நடத்தப்படுவது வழக்கம். அந்த வழக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டி இருக்கிற தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதிகளில் மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது.

தங்களின் பணத் தேவைக்காக யாரிடமும் வட்டிக்கு பணம் வாங்காமல் கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவும் வகையில் இந்த மொய் விருந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப நாட்களில் மிக எளிமையாக நடைபெற்று வந்த இந்த மொய் விருந்து, தற்போது பணம் எண்ணும் எந்திரங்கள், பல ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணக்கூடிய சாப்பாட்டு அரங்கம், பல்லாயிரம் கிலோ இறைச்சிகள் கொண்ட அசைவ உணவு என்று மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

 வசூலான பணம்
வசூலான பணம்

கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மொய் விருந்து விழாக்கள் பெரிய அளவில் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. செலவுகளை சமாளிப்பதற்காக இரண்டு பேர் முதல் 10 பேர் வரை ஒன்று சேர்ந்து மொய் விருந்து நடத்துகிறார்கள்.

அந்த வகையில் பேராவூரணி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நேற்று மொய் விருந்து நடத்தினார். பேராவூரணியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற மொய் விருந்தில் உணவுக்காக 100 கிடாக்கள் வெட்டப்பட்டன. அவற்றின் மூலம் கிடைத்த 1,300 கிலோ கறியில் குழம்பு வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.

பிரமாண்ட பந்தி
பிரமாண்ட பந்தி

துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. விருந்தில் கலந்து கொண்டவர்கள் சாப்பிட்ட பிறகு 1,000 ரூபாய் தொடங்கி ஐந்து லட்சம் வரை மொய் எழுதினர். இதில் மொத்தம் 10 கோடி மொய் வசூலாகியிருந்தது.

மொய் விருந்து வரலாற்றிலேயே 10 கோடி வசூலாகியிருப்பது இதுவே முதல் முறை என்றும், இது புதிய சாதனை என்றும் பேராவூரணிக்காரர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in