திமுக எம்எல்ஏ- அமைச்சர் பொன்முடி இடையே காரசார விவாதம்

திமுக எம்எல்ஏ- அமைச்சர் பொன்முடி இடையே காரசார விவாதம்

தனது தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த கேள்வி நேரத்தின்போது பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி, தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் நெடுந்தூரம் சென்று படித்து வருகின்றனர் என்றும் இதனால் பூந்தமல்லியில் அறிவியல் கலைக் கல்லூரி ஒன்று அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "40 கிலோ மீட்டத்தில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதேபோல் பல உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக, வரும் காலத்திலேயே படிப்படியாக அங்கு கல்லூரிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.

இதன் பின்னர் பேசிய கிருஷ்ணசாமி எம்எல்ஏ, "மாணவர்கள் பொன்னேரி மற்றும் திருத்தணியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிகள் 80 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. எனவேதான், பூந்தமல்லி- பெங்களூரு நெடுஞ்சாலையில் ஒரு கல்லூரி வேண்டும் என்று கேட்கிறேன். மாணவிகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் அற்புதமான திட்டத்தை சமூக நீதி காப்பதற்காக நீங்கள் அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். அந்த வகையில் உயர் கல்வி உயர வேண்டும் என்ற அக்கறையோடு ஆட்சி நடத்துகிற நம்முடைய முதல்வரின் ஆட்சிக் காலத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும்.

என்னுடைய தொகுதியில் சுயநிதி கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் ஏழை மாணவர்களால் கட்டணம் கட்ட முடியாது. பொறியியல் கல்லூரி இருக்கிறது. அங்கு படிப்பதற்கு ஆளே கிடையாது. அறிவியல் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆசைப்படுகிறார்கள். பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் வரை கல்லூரிகளே கிடையாது. எனவேதான் அந்த சாலையில் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கேட்கிறேன்.

சைக்கிளில் சென்று சமூக நீதி கொள்கைகளை காப்பதற்காக தனது ஆரம்ப கால படிப்பை தொடங்கிய அமைச்சர், பூந்தமல்லி தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதி. பூந்தமல்லி பணக்காரர்கள் இருக்கும் தொகுதியாக இருக்கலாம், பூந்தமல்லியில் இருக்கும் மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், கூலித் தொழிலாளர்கள், காவலாளியாக வேலை செய்கிறவர்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சமூக நீதி பரப்பிய அமைச்சரிடம் கேட்கிறேன்" என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, "உறுப்பினர் கேட்பதில் தவறு இல்லை. எல்லோருக்கும் தங்கள் தொகுதிகளில் அதிக கல்லூரிகள் வர வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நான் இருக்கிற சூழ்நிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். தமிழகத்தில் இருக்கிற உயர் கல்வித்துறை, ஏன், இங்கு அமர்ந்திருக்கிற சபாநாயகர்கூட தன்னுடைய தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். சென்ற ஆண்டே கோரிக்கை வைத்தார். இங்கு இருக்கிற பலபேர் அந்த கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே அடிப்படைத் தேவைகள், முதலில் எங்கே இல்லையோ அங்கு கல்லூரி அமைத்துவிட்டு, இருக்கிற இடத்துக்கு பின்னர் கண்டிப்பாக கல்லூரிகள் தொடங்க முதல்வர் ஏற்பாடு செய்வார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in