திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது சென்னை மாநகராட்சி போலீஸில் புகார்!

திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர்
திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர்twitter

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மாநகராட்சி ஊழியரைத் தாக்கியது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்தச் சாலைகளை சீரமைக்கும் பணி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடைபெற்று வருகிறது. சாலை சீரமைக்கப்படும் பணியை முதல்வரே நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவொற்றியூர் நடராஜன் கார்டன் தெருவில், கடந்த 27-ம் தேதி அதிகாலையில் சாலைச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

அப்போது அங்கு வந்த திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தியதாகவும், பிரச்சினையை தீர்க்கமுயன்ற மாநகராட்சி உதவி இன்ஜினீயரைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, திமுக எம்எல்ஏ சங்கர் மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததோடு, அவர் வகித்துவந்த கட்சிப் பதவியைப் பறித்தது.

இதனிடையே, “அரசு அதிகாரியைத் தாக்கிய திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் அங்கு வந்த திமுகவினரை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியிருந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரியை தாக்கியது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in