அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி சிறையிலடைப்பு!

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி சிறையிலடைப்பு!

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் அரசு அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலை வைத்து மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீனவர்கள் சுருக்குமடி மீன்வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்ராண்டு ராமன் காவலர்களோடு சென்று சுருக்குமடியில் பிடித்த மீன்களைப் பறிமுதல் செய்தார்.

அப்போது அங்குவந்த பரதர் உவரியைச் சேர்ந்த திமுக நிர்வாகியும், உவரி முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவருமான அந்தோணிராய்(43) மீன்களை எப்படி பறிமுதல் செய்யலாம் என அதிகாரிகளிடம் தகராறு செய்தார். ஒருகட்டத்தில் அதிகாரியை மிரட்டவும் செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதுகுறித்து மீன் வளத்துறை ஆய்வாளர் உத்ராண்டு ராமன், உவரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர்மீது அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தது, அவதூறு பேச்சு, கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அந்தோணி ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in