`மதவாத நச்சு விதைகளைத் தூவிட நினைக்கும் தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காப்போம்'- திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம்

திமுக
திமுக

கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மாவட்டச் செயலாளர் கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அடிப்படையில் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் கருணாநிதி 99-வது பிறந்த நாள் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இந்திய ஒன்றிய அரசியலில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி பட்டணத்தில் பார்வை கோபாலபுரம் நோக்கியே திரும்பி இருக்கிறது என்பது வரலாறு. குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் மிக முக்கிய பங்காற்றியவர் கருணாநிதி. நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு கால பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். அவருக்கு 2023-ம் ஆண்டு நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அவர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் மாநிலம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி வகுப்பு கூட்டங்களைத் தொடர்ச்சியான நடத்திட வேண்டும்.

மதவாத நச்சு விதைகளைத் தூவிட நினைக்கும் தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காப்போம். அபாய சக்திகளை அடையாளம் காட்டிடத் திராவிட மாடல் பயிற்சிப் பட்டறைகளைத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்த வேண்டும். தமிழ் நிலத்தில் சமூக நீதியும் மத நல்லிணக்கமும் செழித்துச் சிறப்புறுவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ளாத சிலர் மதவாத நச்சு விதைகளைத் தூவுகிறார்கள். தேச விரோத அபாய சக்தியினரையும், அவர்களுக்கு துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீரர்களையும் அடையாளம் காட்டி அவர்களிடமிருந்து தமிழகத்தை எவ்வித சேதாரமும் இன்றி காக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், செயல்படாத மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை நீக்கவும், வேறு நபர்களுக்கு அந்த பதவிகளைக் கொடுப்பதற்காகவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in