
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு மார்ச் 1ம் தேதி 70 வயதாகிறது. அவரின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அனைவரும் எளிதான முறையில் வாழ்த்து சொல்வதற்கும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் திமுக ஐ.டி. விங்க் சார்பில் புதிய வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுமையான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கட்சித் தொண்டர்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அவரின் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
'போன் எ விஷ்' என்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தில் 07127 191333 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யலாம். இன்று முதல் மார்ச் 2-ம் தேதி வரை இந்த தொலைபேசி இணைப்பில் வாழ்த்துகளைப் பதிவு செய்யலாம்.
'செல்ஃபி வித் சிஎம்' என்ற திட்டத்தின் கீழ் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவர்கள் மெய்நிகர் சேவையைப் பயன்படுத்தி, முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவு செய்யலாம்.
www.selfiewithCM.com என்ற இணையதளத்துடன் QR குறியீடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுக்கலாம்.
அந்த புகைப்படத்தை தங்களது சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்லலாம். திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மேற்கொண்டுள்ள இந்த புதிய தொழில்நுட்ப முயற்சி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.