அண்ணாமலைக்கு எதிராக ஹேஷ்டேக்: ட்ரெண்ட் செய்யும் திமுக ஐடி விங்!

அண்ணாமலைக்கு எதிராக ஹேஷ்டேக்: ட்ரெண்ட் செய்யும் திமுக ஐடி விங்!

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ‘செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல’ என்ற ஹேஷ்டேக்கினை அதிகம் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று மதுரை விமான நிலையம் அருகே குவிந்தனர். அப்போது அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்ற நிதி அமைச்சரின் காரின் மீது பாஜக தொண்டர்கள் காலணிகளை வீசினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலணி எறிந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்னர் அமைச்சரின் வாகனம் அங்கிருந்து சென்றது. அமைச்சரின் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த பாஜகவினர் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து அமைச்சரின் தூண்டுதல் பேரில் திமுகவினரும், காவல் துறையினரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த திமுகவினர், ‘செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல’ எனக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். திமுக ஐடி விங் அணியினர், ‘#செருப்புபிஞ்சிரும்அண்ணாமல’ என்ற ஹேஷ்டேக்கினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in