`மத்திய அரசுடன் திமுக அரசு கைக்கோர்த்து செயல்படுகிறது'- பரந்தூர் மக்களை சந்தித்த வேல்முருகன் ஆவேசம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்மத்திய அரசுடன் கைகோர்த்து, இரட்டை நிலைப்பாட்டுடன் திமுக செயல்படுகிறது - வேல்முருகன் குற்றச்சாட்டு

'’ விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திமுக அரசு மத்திய அரசுடன் கைக்கோர்த்து இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கிறது’’ என தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிரான கிராம மக்களின் போராட்டம் இன்று 200-வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். போராட்டத்தில் அவர் பேசுகையில், ‘’இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது மத்திய அரசுடன் கைக்கோர்த்துக் கொண்டு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன் வைக்கிறோம்.

எதிர்க்கட்சியாக பத்தாண்டுகள் காலம் எங்களோடு எல்லா போராட்டத்திலும் கைகோர்த்து நின்றுக்கொண்டு இன்றைக்கு மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது என்பதற்காக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த துணிவது நியாயம்தானா? என கேட்கிறேன்.

போராட்டக்களத்தில் கண்ணீரோடு நிற்கும் இந்த தாய்மார்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? சட்டப்பேரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்களில் கொஞ்சமும் நியாயமான அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கைகளை பற்றிக் கொண்டுக் கேட்டேன். இந்த திட்டத்தை எப்படியாவது கைவிடுங்கள் என்று முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என சென்றுவிட்டார்.

இதுவே இந்த இடத்தில் நூறு ஜெயின் வீடு, நூறு மார்வாடி வீடு இருந்திருந்தால் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வருவீர்களா? பூர்வக் குடி மக்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக அரசு எண்ணி பார்க்க வேண்டும்.

என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலம் கொடுத்தவர்கள் இன்று வரை வேலை பெறமுடியாமல், வீடுவாசல் இல்லாமல் தவிக்கின்றனர. அதே நிலைத்தான் இந்தபகுதி மக்களுக்கும் ஏற்படும். இந்திய அரசுக்கு ஒரு விமானம் கூட இல்லை. ஏர் இந்தியா விமானங்களையும் டாடா நிறுவனத்துக்கு மோடி அரசு விற்றுவிட்டது. அப்படி இருக்கும் போது இங்கு எதற்கு விமான நிலையம்?’’ என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in