எத்தனை தொகுதிகள் கிடைக்கும்? - திமுகவுடன் இன்று மதிமுக பேச்சுவார்த்தை!

ஸ்டாலின், வைகோ, துரை வைகோ
ஸ்டாலின், வைகோ, துரை வைகோ
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன், மதிமுக இன்று முதல் கட்ட ஆலோசனை நடத்தவுள்ளது. ஏற்கெனவே திமுகவுடன் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளது.

இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தயாராகி வருகின்றனர். மேலும் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகளையும் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழு கடந்த ஒரு வாரங்களாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான மதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11.00 மணி அளவில் நடத்த உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் கழக அவைத் தலைவர் அர்ஜூனராஜ், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி அந்தரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வைகோ, துரை வைகோ
வைகோ, துரை வைகோ

கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி உதயசூரியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் திமுக அளித்தது. தற்போது மதிமுக சார்பில் ஈரோடு, திருச்சி, விருதுநகர் இவற்றில் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவிடம் மதிமுக எத்தகைய கோரிக்கையை வைக்கவுள்ளது என்பது இன்று தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in