`ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக'- வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

`ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக'- வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும் தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வதற்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தந்தை பெரியாருடைய பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த நமது திராவிட மாடல் அரசு. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற திருவருட்பிரகாச வள்ளலாருடைய பிறந்த நாளை கருணைய நாளாக அறிவித்திருக்கிறது. வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய தர்மசாலைக்கு 156 ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி நடப்பதை பார்த்து சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன்? அதிர்ச்சியாக கூட இருக்கலாம். திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது, திராவிட மாடல் ஆட்சியானது மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக் கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள். மீண்டும் இதை நான் குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன்.

திராவிட மாடலாட்சியானது ஆன்மிகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது, இது மட்டும் போட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பேசினார் என்று வெட்டி ஒட்டி பின்னாலே பேசுறது வெட்டிடுவாங்க. அதற்குகென்று சில சமூக ஊடகங்கள் இருக்கிறது. நான் தெளிவோடு சொல்ல விரும்புவது, ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும் தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வதற்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி. தமிழ் மண்ணின் உடைய சமய பண்பாட்டு அறிந்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று பிற்போக்கு கயமைத்தனங்கள் எதிர்க்கக்கூடிய வள்ளுவரின் பண்புதான் இந்த தமிழ் மண்.

வள்ளலார் அவர்கள் கருணையை கடவுள் என்றவர். ஆனால் பசிப்பிணி போக்குவது இறை பணி என நினைத்தார். அடுப்பை மூட்டினார், பசிப்பிணி தடுத்தார். அவர் வழியில் நடக்கக்கூடிய இந்த அரசு காலை உணவு திட்டத்தை தொடங்குகிறது. பசியுடன் பள்ளிக்கு வரக்கூடிய வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டிருக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்னபடி ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. மனிதர்கள் இடையே வேறுபாடு இருக்கக்கூடாது. நல்லிணக்கம் வேண்டும், அன்பும் கருணையும் ஒவ்வொருவர் வாழ்வையும் வழிநடத்த வேண்டும், இரக்க குணமும் உதவும் மனமும் வேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொன்னவர் வள்ளலார். சோறு போடுவது, அன்னதானம் வழங்குவது மட்டும் அவரது அறநெறி அல்ல. சாதி, மத வேறுபாடற்ற சமநிலை சமூகம் அமைக்க பாடுபடுவது தான் வள்ளலாருடைய வழியில் நடப்பது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in