யாரும் வரலாம்: திமுகவின் திகைப்பூட்டும் தேர்தல் வியூகங்கள்!

யாரும் வரலாம்: திமுகவின் திகைப்பூட்டும் தேர்தல் வியூகங்கள்!
Updated on
4 min read

2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது பாஜக. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸோ, இன்னமும் யாருடன் கூட்டணி வைப்பது, எத்தகைய வியூகம் வகுப்பது என்பதெல்லாம் பிடிபடாமல் இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக, தமிழகத்தில் தங்களது வெற்றியை தக்கவைப்பதற்கான முயற்சிகளை பாஜகவுக்கு நிகரான பாய்ச்சலில் செய்துகொண்டிருக்கிறது!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் உட்கட்சி விவகாரங்கள் உச்சியைப் பிடித்து ஆட்டுவதால் மக்களவைத் தேர்லைப் பற்றி சிந்திக்க அதிமுகவுக்கு இப்போது நேரமில்லை. உட்கட்சி பஞ்சாயத்துகள் சிக்கலின்றி முடிந்தாலுமே அந்தக் கட்சியானது பாஜகவின் வாலைப்பிடித்துக்கொண்டே நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதையெல்லாம் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு, “நாளை நமதே... நாற்பதும் நமதே” என மீண்டும் முழங்க ஆரம்பித்திருக்கிறது திமுக. இதற்கான முன்னெடுப்பைக் கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலேயே தொடங்கிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். முன்பு அதிமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் இப்போது அந்தக் கூட்டணியைவிட்டு விலகி நிற்கின்றன. திமுக கூட்டணியிலிருந்து அப்படி எந்தக் கட்சியும் விலகவில்லை. மாறாக, புதிதாக இன்னும் சில கட்சிகள், அழைத்தால் அறிவாலயப் பிரவேசம் செல்லத் தயாராய் இருக்கின்றன. அந்தளவுக்கு கூட்டணித் தோழர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களை தன்னுடனேயே தந்திரமாகத் தக்கவைத்திருக்கிறார் ஸ்டாலின்.

2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி இதுவரை நடந்துள்ள அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிமுகமே கண்டு வரும் திமுக, தனது கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க நினைப்பதிலும் அர்த்தம் இருக்கவே செய்கிறது.  

முதல்வரை சந்திக்கும் அண்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர்
முதல்வரை சந்திக்கும் அண்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர்

பொதுவாக, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திமுகவுக்கே சாதகமாக இருப்பார்கள். ஆனால், இப்போது அவர்கள் திமுக அரசு மீது கெட்ட கோபத்தில் இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் திமுக அளித்த தாங்கள் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பதே கோபத்துக்கான காரணம். இதை பொதுவெளியிலும் சமூக ஊடகங்கள் வழியாகவும் அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதேபோல், திமுக அரசின் அதிரடியான சில சீர்திருத்த நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்கள், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை - என்பது போன்ற சமாச்சாரங்களையும் இந்த அரசிடம் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கிறார்கள். நகைக்கடன் தள்ளுபடி விஷயத்திலும் திமுக சொன்னபடி திமுக அரசு நடந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. 

இதன் தாக்கத்தை எல்லாம் உணர்ந்திருப்பதால் தான்,  பழைய ஓய்வூதிய திட்டம், மகளிருக்கு மாதாந்திர உரிமைத்தொகை தருவது போன்ற செய்திகளை மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறது திமுக. 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பெருமிதம் கொள்ளும் முதல்வர், இந்த விஷயங்களுக்கும் செயல்வடிவம் தந்துவிட்டால் மக்களையும் திருப்திப்படுத்தி விடலாம், எதிர்க்கட்சிகளின் வாயையும் அடைத்துவிடலாம் என திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள். 

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்

எனினும், ஆளும்கட்சிக்கு எதிராக ஆங்காங்கே தலைதூக்கும் அதிருப்திகளை சமாளிக்க புதிதாக இன்னும் சில கட்சிகளையும் உள்ளே கொண்டுவர திட்டமிடுகிறது திமுக தலைமை. அதன் படிதான் காங்கிரஸ் ரூட்டில் கமலை வளைத்துப் போட்டது. ‘மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் கமல் திமுக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுவார்’ என்கிற அளவுக்கு பேச்சு வளர்ந்துவிட்டது. 

மக்கள் நீதி மய்யத்தைப் போலவே பாமக, தேமுதிகவையும் தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தரப்பில் முயற்சிகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டதுமே நேரம் ஒதுக்கி பாமக பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கிறார் முதல்வர். சுமார் ஓராண்டுக்கும் மேலாகவே இரு தரப்பும் ஒருவரை ஒருவர் அதிகம் விமர்சிக்காமல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறார்கள். கூடுதல் தகவலாக, “மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இருக்காது” என்று அன்புமணியை அறிவிக்கவும் வைத்திருக்கிறது திமுக. கிட்டத்தட்ட தேமுதிகவையும் இதே கண்ணோட்டத்தில் தான் வைத்திருக்கிறது திமுக.

தேமுதிகவும், பாமகவும் தற்போது அதிமுக கூட்டணிக்கு வெளியே நிற்கின்றன. இவர்களை இப்படியே விட்டால் மீண்டும் இவர்களை அதிமுக தனது கூட்டணிக்குள் இழுத்துப்போட முயற்சிக்கலாம். அத்தகையை வாய்ப்பை வழங்கிவிடக் கூடாது என்ற திட்டமும் திமுகவின் இழுப்பு அரசியலுக்குள் இருக்கிறது.

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில்...
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில்...

தமிழ்நாட்டில் தங்களது கூட்டணியை இன்னும் பலப்படுத்தும் முயற்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தேசிய அளவிலும் பாஜகவுக்கு மாற்றான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க மீண்டும் முயற்சிக்கிறார். மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த  நாள் விழா கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளின் தலைவர்கள் பலர் ஒன்றாக மேடை ஏறியது கூட அதற்கான ஒரு முன்னெடுப்புத்தான்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

திமுகவின் இந்த நகர்வுகள் குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். ”கடந்த மக்களவைத் தேர்தலின் போதே அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான மாற்று அணியை உருவாக்க திமுக முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது அது சாத்தியமாகா விட்டாலும் இப்போது கைகூடி வருகிறது.  இம்முறை பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் ஒன்றுதிரட்ட திமுக உறுதுணையாக இருக்கும். 

அதேசமயம், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வேலைகளையும் திமுக துரிதப்படுத்துகிறது என்பது உண்மைதான். அதன் ஒரு திட்டமாக, கூட்டணியை விரிவாக்க முயற்சிக்கிறோமா என்றால் ஆமாம் என்றுதான் சொல்வோம்.  புதிதாக மக்கள் நீதி மய்யம் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபோல எங்களை ஏற்றுக்கொண்டு வருகிற பாமக, தேமுதிக உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராகவே இருக்கிறோம். 

இதுவரை 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டோம்.  மீதமுள்ளவையும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.  கல்வியில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்று இருப்பது போல கடந்த ஆண்டு சிலவற்றை நிறைவேற்றினோம்.  இந்த ஆண்டு பலவற்றை நிறைவேற்றி வருகிறோம்.  அடுத்த ஆண்டு எஞ்சியுள்ளவை நிறைவேற்றப்பட்டுவிடும்.  மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் எதிர்காலத்தை நோக்கிய மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவோம். அதற்கும் தேர்தலுக்கும் முடிச்சு போட வேண்டாம்” என்றார் அவர். 

ராகுலுடன் ஸ்டாலின்
ராகுலுடன் ஸ்டாலின்

“ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்” என்று கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் முதல் ஆளாகச் சொன்னவர் மு.க.ஸ்டாலின். இந்தத் தேர்தலுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை தமிழகம் மட்டுமல்ல தேசியக் கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in