வரிவேட்டையைத் துவக்கி விட்ட திமுக !

முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்
ஓ.பன்னீர்செல்வம்.
ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சிக்‌ காலத்தில்‌ 2018-ம்‌ ஆண்டு குடியிருப்புகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டபோது அதனை எதிர்த்துகுரல்‌ கொடுத்தவர்‌ அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவரும்,‌ தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின்‌‌. சொத்து வரி உயர்வுக்கு எதிராக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்‌ முன்பு ஆர்ப்பாட்டம்‌ நடத்திய கட்சி திமுக. இந்த சொத்து வரி 2019-ம்‌ ஆண்டு அதிமுக ஆட்சிக்‌ காலத்திலேயே திரும்பப்‌ பெறப்பட்டதோடு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரி வரும்‌ ஆண்டுகளில்‌ சரிகட்டப்படும்‌ என்றும்‌ அறிவிக்கப்பட்டது.

அதன்படி கூடுதலாக வரிலிக்கப்பட்ட வரி வரும்‌ ஆண்டுகளில்‌ சரிகட்டப்பட்டது. இதனையும்‌ அப்போதைய எதிர்க் கட்சித்‌ தலைவர்‌ விமர்சித்தார்‌. எதிர்வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு வரி உயர்வு திரும்பப்‌ பெறப்பட்டு இருக்கிறது என்றும்‌, கூடுதலாக வசூலிக்கப்பட்ட சொத்து வரியினை வரும்‌ ஆண்டுகளில்‌ சரிகட்டுவதற்குப்‌ பதிலாக ரொக்கமாக திருப்பி அளிக்க வேண்டுமென்றும்‌ வாதிட்டவர்‌ மு.க.ஸ்டாலின் . இவையெல்லாம்‌ திமுக ஆட்சிக்கு வருவதற்காக அரங்கேற்றப்பட்ட கபட நாடகங்கள்‌.

தற்போது அரசால்‌ வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, நகராட்சி மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ உள்ள 600 மற்றும்‌ அதற்குக்‌ குறைவான சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 25 சதவீதம்,‌ 601 முதல்‌ 1200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 50 சதவீதம்‌, 1201 முதல்‌ 1800 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 75 சதவீதம்‌, 1801-க்கும் மேற்பட்ட சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 சதவீதம்‌ வரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள்‌, தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளுக்கு 75 சதவீதம்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ காலி மனைகளுக்கு 100 சதவீதம்‌ சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப்‌ பகுதிகளில்‌ உள்ள தொழிற்சாலைகள்‌, தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளுக்கு 75 சதவீதம்‌, வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல்‌, சென்னையின்‌ பிரதானப் பகுதிகளில்‌ உள்ள 600 மற்றும்‌ அதற்கு குறைவான சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவீதம்‌, 601 முதல்‌ 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவீதம், 1201 முதல்‌ 1800 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 சதவீதம்‌, 1801 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 350 சதவீதம்‌ சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில்‌ உள்ள தொழிற்சாலைகள்‌, தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளுக்கு 100 சதவீதம், வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதம்‌ சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர்‌ வரி என்பது மாநகராட்சியின்‌ ஆண்டு மதிப்பு அடிப்படையில்‌ நிர்ணயம்‌ செய்யப்படுவதால்‌, அரசின்‌ சொத்து வரி உயர்வு அறிவிப்பு குடிநீர்‌ வரி உயர்வுக்கு தானாகவே வழிவகுக்கும்‌.

தமிழக மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, நம்பி வாக்களித்த வாக்காளப்‌ பெருமக்களிடமிருந்து வரி வசூல்‌ வேட்டையை ஆரம்பித்திருக்கிறது திமுக. இந்த வரி உயர்வின்‌ மூலம்‌ சொந்த வீடுகளை வைத்திருப்போர்‌ மட்டுமல்லாமல்‌ வாடகைக்கு குடியிருப்போரும்‌ பாதிக்கப்படுவர்‌.

எனவே, அனைத்துத்‌ தரப்பு மக்களையும்‌ பாதிக்கும்‌ சொத்து வரி உயர்வினை முதல்வர் உடனடியாக திரும்பப்‌ பெற வேண்டும். இல்லையெனில்‌, இதனை எதிர்த்து அதிமுக‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு முழுவதும்‌ நடத்தும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in