தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி: மணப்பாறை நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக!

தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி: மணப்பாறை நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக!

மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மணப்பாறை நகராட்சியை மீண்டும் தன்வசப்படுத்தி உள்ளது திமுக.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக கூட்டணியுடன் சேர்த்து 11 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அவர்கள் ஐந்து பேரும் திமுகவில் சீட்டு கிடைக்காமல் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர்கள் என்பதால் அவர்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். அமைச்சர் நேருவை சந்தித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.

ஆனால் தேர்தல் நடந்த போது 11 உறுப்பினர்களை வைத்திருந்த அதிமுக 15 வாக்குகளை பெற்று தலைவர் பதவியை கைவசப் படுத்தியது. அக்கட்சியை சேர்ந்த பா.சுதா தலைவரானார். இதன் மூலம் 55 ஆண்டு காலத்திற்கு பிறகு மணப்பாறை நகராட்சியை அதிமுக கைப்பற்றியது.

இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் நேரு கட்சிக்காரர்களிடம் கடிந்து கொண்டார். அதனையடுத்து நகராட்சி பக்கம் வருவதையே திமுக உறுப்பினர்கள் தவிர்த்தனர். 3 மாதம் முடிந்தபோதும் திமுக உறுப்பினர்கள் யாரும் பங்கேற்காததால் துணைத் தலைவர் தேர்தலும், நகர்மன்றக் கூட்டமும் நடைபெறவேயில்லை. இதனிடையே அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நகர்மன்ற கூட்டத்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டும், திமுக உறுப்பினர்கள் யாரும் பங்கேற்காததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இப்படி தொடர்ந்து செயல்படாத நிலையே நீடித்ததால் தலைவர் பதவியை சுதா ராஜினாமா செய்தார். அதையடுத்து இன்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல் ராஜ் 18 வாக்குகளை பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் அதிமுக வேட்பாளர் ராமன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் தொடர்ந்து திமுக வசம் இருந்து வந்த நகராட்சியை அலட்சியத்தால் கைவிட்ட திமுக திரும்பவும் தங்கள் வசம் கொண்டு வந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in