திமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்: போலீஸ் குவிப்பு, போக்குவரத்து மாற்றம்!

திமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்: போலீஸ் குவிப்பு, போக்குவரத்து மாற்றம்!

திமுக பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இதற்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு நாளை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்து தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நேற்று வேட்புமனுவை வழங்கினார். அவருடன் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால் எவ்வித சலவலப்பும் இல்லாமல் பொதுக்குழு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறும் பொதுக்குழுவிற்கு நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு கூடுவார்கள். இதனால் கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுக்குழு நடைபெறுவதற்கான மேடை, வரவேற்பு பேனர்கள், பந்தல் அமைப்பு என விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in