தேனி திமுகவில் 3 நகர செயலாளர்கள் நீக்கம் ஏன்?

தேனி திமுகவில் 3 நகர செயலாளர்கள் நீக்கம் ஏன்?
தேனி நகர்ப் பொறுப்பாளர் பாலமுருகன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது தொடர்ந்து திமுக நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தேனி நகர்ப் பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர்ப் பொறுப்பாளர் முரளி, போடி நகர்ப் பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் அந்தப் பதவியை இழந்திருப்பதுடன், கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

காரணம் என்ன?

தேனி நகர்ப் திமுக பொறுப்பாளர் பாலமுருகன் தேனி நகராட்சி 20-வது வார்டிலும், அவரது மனைவி ரேணுப்பிரியா 10-வது வார்டிலும் வெற்றி பெற்றனர். நகராட்சித் தலைவர் பதவியை குறிவைத்து அவர்கள் வேலைசெய்த நிலையில், அந்தப் பதவி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி, தன்னுடைய மனைவி ரேணுப்பிரியாவை நகராட்சித் தலைவராக்கினார்.

இதேபோல பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 26-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான ராஜாமுகம்மது அந்தப் பதவியை கைப்பற்றினார். இதற்கெதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடியது. திமுகவும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் அவர் பதவி விலக மறுத்துவிட்டார். இதேபோல போடி நகராட்சி துணைத்தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 25-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணவேணி கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அந்தப் பதவியை கைப்பற்றினார்.

இதன் காரணமாகவே அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருப்பதாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வம் கூறியுள்ளார். திமுகவின் இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in