
தனது ஆடுகளைக் கொன்றவர்கள் மீது மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியருக்கு மனுவுடன் அல்வாவை திமுக நிர்வாகி தந்த சம்பவம் கோவையில் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வேடப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். திமுக நிர்வாகியான இவருக்குச் சொந்தமாக ஆட்டுப்பண்ணை இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு இப்பண்ணையில் இருந்த 5 ஆடுகளை மர்நபர்கள் விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையிடம் ஜெகநாதன் புகார் அளித்தார். அதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஜெகநாதன் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென்று தெரிகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த ஜெகநாதன், மனுவுடன் அல்வாவை சேர்த்து அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " ஆடுகளை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மூன்று ஆண்டுகளாக காவல் துறையினரும்,, ஆட்சியரும் எனக்கு அல்வா கொடுத்து வருவதால் அவர்களுக்கு நான் அல்வாவுடன் சேர்ந்து மனு கொடுத்தேன் "என்றார். இந்த சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.