தகராறை தட்டிக்கேட்ட காவலரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி கைது!

திமுக பிரமுகர் கண்ணன்
திமுக பிரமுகர் கண்ணன் தகராறை தட்டிக்கேட்ட காவலரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி கைது!

நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்துச்செல்வன்(40). இவர் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு காவலர் முத்துச்செல்வன் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் அருகே வரும்போது மனநலம் குன்றிய ஒருவர் நடுரோட்டில் சாலையில் செல்வோரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டு வந்ததை பார்த்த காவலர், உடனே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வாலிபரிடம் சென்று இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என எச்சரித்ததுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டி செல்போனை எடுத்துள்ளார்.

அப்போது அருகில் காரில் மது அருந்தி கொண்டிருந்த நபர் ஒருவர், காவலர் முத்துச்செல்வனிடம், நீ யார்? இதை செய்வதற்கு என கேட்டு அவரை தகாத வார்த்தையில் திட்டி அவரை கன்னத்தில் அறைந்ததுடன் அவரது செல்போனை பறித்துக் கொண்டார். உடனே காவலர் முத்துச்செல்வன் இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸாரை தாக்கிய அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அமைந்தகரை பகுதியை சேர்ந்த கண்ணன் (44) என்பதும் இவர் திமுகவில் மேற்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை தலைவராக இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் கண்ணன் மீது அரசு ஊழியரை தாக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in