சீனியர்களை ஓரங்கட்டச் சொல்லும் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கருணாநிதி இருக்கும் போதே கட்சிக்குள் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கிக்கொண்டார் ஸ்டாலின். அப்பா வழியில் மகன் உதயநிதியும் இப்போது அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறாராம். திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் சில இடங்களில் சீனியர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வியூகம் வகுக்கப்படுவது அதனால்தானாம். தனது தரப்பில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து உதயநிதி முன்கூட்டியே ஸ்டாலினிடம் லிஸ்ட் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். “தொடர்ந்து பல ஆண்டுகளாக இவர்களே மாவட்டச் செயலாளர்களாக உட்கார்ந்திருப்பதால் கட்சி பெரிதாக வளர்ச்சியில்லாமல் இருக்கிறது. எனவே, இவர்களை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் அந்த மாவட்டங்களில் எல்லாம் கட்சி எழுச்சி பெறும்” என்று மகன் சொன்னதை ஸ்டாலினும் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டாராம். அதனால், இம்முறை உதயநிதி கைகாட்டிய புதியவர்களில் சிலருக்கும் மாவட்டச் செயலாளர் பதவிகள் சாத்தியமாகலாம் என அறிவாலய வட்டாரத்தில் அடித்துச் சொல்கிறார்கள். அதேசமயம், புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதாகச் சொல்லி, இத்தனை ஆண்டு காலம் அடிபட்டு மிதிபட்டு கட்சி வளர்த்த சீனியர்கள் உதாசீனப்படுத்தப்படுவதில் தலைமைக் கழக நிர்வாகிகளிலேயே சிலருக்கு உடன்பாடில்லையாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in