ஈவிகேஎஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்ததன் பின்னணியில் அறிவாலயம்!

ஈவிகேஎஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்ததன் பின்னணியில் அறிவாலயம்!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் முடிவானதற்கு திமுக தலைமை தந்த அழுத்தமே காரணமாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா அகால மறைவை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிப்பாகி உள்ளது. திமுக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் நிற்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கும், குறிப்பாக ஈவிகேஎஸ் குடும்பத்துக்கும் வழங்க எந்தச் சலனமும் இன்றி திமுக தலைமை ஒப்புக்கொண்டது. மகன் மறைவால் சோகம் சூழ்ந்திருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு, வேட்பாளர் தேர்வை முன்வைத்து காங்கிரஸ் கட்சிக்கே உரிய உட்கட்சி விவகாரங்கள் சீண்டல் விடுத்தன. காங்கிரஸ் வேட்பாளரை ஈவிகேஎஸ் குடும்பத்துக்கு வெளியே தேர்வு செய்யலாம் என, ஈரோடு மக்கள் ராஜனை முன்வைத்து சத்தியமூர்த்தி பவனில் விவாதம் ஓடியதையும் அறிவாலயம் ரசிக்கவில்லை.

இதற்கிடையே தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட்டு கோரி மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்து வந்தார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும், முந்தைய தேர்தல் அனுபவங்களின் அடிப்படையிலும், தன்னை வேட்பாளராக முன்னிறுத்த ஈவிகேஎஸ் தயங்கினார். ஆனால், அரசியல் களத்தோடு சற்றும் ஆர்வமில்லாது வளர்ந்த சஞ்சய் சம்பத், திடீரென அரசியலில் குதிக்கவும், வேட்பாளராக மாறவும் பெரிதாக யோசித்தார்.

வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவனை நிறுத்த வேண்டும் என்று சத்தியமூர்த்தி பவனுக்கு அறிவாலயம் சமிக்ஞை அனுப்பியது. இளங்கோவன் மீண்டும் முக்கிய சக்தியாக வளர்வதை அவரது உட்கட்சி எதிரிகள் விரும்பவில்லை. அதே வேளையில் திமுக அழுத்தத்தையும் தட்ட முடியவில்லை. முன்னதாக வேட்பாளர் தேர்வு குறித்து டெல்லி மேற்பார்வையாளர்களுடன் ஒரு சுற்று திமுக கலந்திருந்ததும், சத்தியமூர்த்தி பவனை அடக்கி வாசிக்கச் செய்தது.

காங்கிரஸ் முகாமுக்கு அப்பால், ஈரோடு இடைத்தேர்தலை தங்களுக்கான உரைகல்லாக திமுக பார்க்கிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் ஜெயிக்கும் என்ற போதும், அந்த வெற்றியை பெருமளவிலான வாக்கு வித்தியாசத்தில் நிகழ்த்த திமுக விரும்புகிறது. ஆட்சியமைத்த பின்னர் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதாலும், மக்களின் ஆதரவை நிரூபிக்கும் வாய்ப்பு என்ற வகையிலும், காங்கிரஸ் கட்சியைவிட திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாகிறது.

இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் பாஜகவினர் தீயாய் செயல்படுவார்கள் என்பதால், திமுக கூட்டணியின் வேட்பாளர் தேர்வில் சமரசம் கூடாது என்பதில் முடிவாக இருந்தனர். தயங்கும் சஞ்சய் சம்பத்தை இழுத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பது தொடர்பாக திமுக இரண்டாம் கட்டத் தலைவர்களும் கவலை தெரிவித்தனர். இது தொடர்பாக ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடனான நேற்றைய நேரடி சந்திப்பிலும் திமுக தலைவர் ஸ்டாலின் விரிவாக பேசி இருக்கிறார்.

இதன் பிறகே வேட்பாளராக சம்மதம் தெரிவித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், சோகங்களை தள்ளி வைத்துவிட்டு களமிறங்கியவராக விறுவிறுப்பு காட்டி வருகிறார். இப்படி பைபாஸில் டில்லி தலைமையுடன் பேசி காங்கிரஸ் வேட்பாளரை முடிவு செய்யும் திமுகவின் போக்கை காங்கிரஸ் தலைவர்களில் பலர் விரும்பவில்லை என்றபோதும், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை மனம் குளிர்ந்திருக்கிறார். தனது இருக்கையை குறிவைத்து குடைச்சல் தரும் செல்வப்பெருந்தகையை தட்டிவைக்க, இளங்கோவனின் புறப்பாடு அவசியம் என்ற கணக்கில் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

மாமாங்க காலமாக தேர்தல் களத்தில் தொடர் தோல்விகளை சந்தித்திருக்கும் ஈவிகேஎஸ்.இளங்கோவன், இந்த இடைத்தேர்தல் வாயிலாக 74 வயதில் அடுத்த இன்னிங்ஸ் அரசியல் ஆட்டத்துக்கு தயாராகி வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in