ஈபிஎஸ்ஸை திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது... திடீர் பாசம் காட்டும் அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலை
Updated on
1 min read

அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ்ஸை பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பலரும் அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில், அவர்களுக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் அண்ணாமலை பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கெல்லாம் அதிமுக ஆதரவு அளிப்பது வெட்கக் கேடானது என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தலைநகர் டெல்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நமது மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள் இதை நேற்று பாராளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.

1975ஆம் ஆண்டு, நாட்டில் எமர்ஜென்சி அறிவித்து ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, 1980ல் `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், இது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக் கொள்ளும் தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.

மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஈபிஎஸ் அவர்கள் ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in