பாஜக- திமுகவினர் பயங்கர மோதல்; நொறுக்கப்பட்ட மளிகை கடை; கவுன்சிலர் காது கிழிந்தது

திமுக கவுன்சிலர் ஞானமணி
திமுக கவுன்சிலர் ஞானமணி

நாகை  அருகே  திமுகவினரும்,  பாஜகவினரும் கடுமையாக  தாக்கிக் கொண்டதில்  திமுக கவுன்சிலர் படுகாயடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்  ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

நாகை அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த இவருக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில்  நகர்மன்ற தேர்தலில்  நாகை நகர் மன்றத்துக்கு கவுன்சிலர் சீட்டு  வழங்கப்படவில்லை.  அதனால் திமுக வேட்பாளர் ஞானமணிக்கு எதிராக சுயேச்சையாக  போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் அதிருப்தியில் இருந்த அவர்  கடந்த 1-ம் தேதி  திமுகவில் இருந்து விலகி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை  சந்தித்து பாஜகவில் இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில் விஜேயந்திரனுக்கு நேற்று பாஜக நாகை மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாக விஜயேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி வீடு அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது  அருகில் இருந்த  ஞானமணிக்கு சொந்தமான மளிகை கடையில் பட்டாசு வெடித்து கடையின்  கண்ணாடி உடைந்தது. 

இது குறித்து விஜேந்திரனிடம் ஞானமணி தெரிவிக்க சென்றுள்ளார். அப்போது விஜேந்திரன் ஆதரவாளர்கள் ஞானமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விஜயேந்திரன் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஞானமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனையடுத்து  108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு  காதில் எட்டு தையல்கள் போடப்பட்டது. இதேபோல் விஜேந்திரன் ஆதரவாளர்கள்  5 பேரும்  நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணியின் மளிகை கடையையும் பாஜகவினர் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர், மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனையில் திமுக மற்றும் பாஜகவினர் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in