புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ன ஆயிற்று?

சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
சட்டப்பேரவைக்கு வெளியே திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்
சட்டப்பேரவைக்கு வெளியே திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன் வெளிநடப்பும் செய்தனர்.

புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி கூட்டப்பட்டு அன்றைய தினத்திலேயே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் 2022-23-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். மேலும் 2021-22-ம் நிதியாண்டிற்காக கூடுதல் செலவினம் குறித்த மசோதா ஒன்றையும் தாக்கல் செய்தார்.

பேரவையின் உள்ளே பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பும் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்
பேரவையின் உள்ளே பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பும் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்

மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி கிடைக்காததால் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட முடியாத நிலை புதுச்சேரியில் நிலவி வருகிறது. அதன் காரணமாகவே இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். பாஜகவின் ஆறு உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு வரவில்லை.

இந்த நிலையில்தான் புதுச்சேரி மாநிலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு புதுச்சேரிக்கு செய்வதாக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ன ஆயிற்று? என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்த பதாகைகளையும் அவர்கள் சட்டப்பேரவையின் உள்ளே ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.


படங்கள்: எம் சாம்ராஜ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in