கூடுதல் தொகுதிகள் வேண்டும்; திமுக மட்டும் என்ன காங்கிரசுக்கு இளப்பமா?

ராகுல், ஸ்டாலின்
ராகுல், ஸ்டாலின்

மற்ற மாநிலங்களில் எல்லாம் காங்கிரசுக்கு ஒன்று, இரண்டு என இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் தங்களுக்கு 15 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“மற்ற மாநிலங்களில் எல்லாம் கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் காங்கிரஸ், தமிழகத்தில் மட்டும் எங்களிடம் அதிகமான தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுக்கிறது” என திமுக தலைகள் பலர் வெளிப்படையாகவே விசும்புகின்றனர்.

இந்தியாவில் 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலமான உ.பியில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என கறார் காட்டுகிறார் அகிலேஷ் யாதவ். அதேபோல மேற்கு வங்கத்தில் “அதிகபட்சமாக காங்கிரசுக்கு 2 தொகுதிகள் கொடுக்கலாம்... ஆனால், அதற்கும் ஒரு நிபந்தனை” என்கிறார் மம்தா. “விருப்பமிருந்தால் கூட்டணியில் இருங்கள், இல்லையென்றால் நான் தனித்தே பாஜகவை வீழ்த்துவேன்” என்று அடுத்தகட்ட பிரகடனத்தையும் அவர் அறிவித்துவிட்டார். ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாபில் தங்கள் கட்சி தனித்தே போட்டியிட்டு வெல்லும் என்று தெரிவித்துவிட்டார்.

ராகுல், மம்தா, சோனியா மற்றும் கார்கே
ராகுல், மம்தா, சோனியா மற்றும் கார்கே

ஓரளவு இந்தியா கூட்டணி பலத்துடன் இருந்த பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டு பாஜகவுடன் கைகோத்துவிட்டார். அதேபோல ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனும் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஓரளவு பலத்துடன் உள்ள மகாராஷ்டிராவிலும் இந்தியா கூட்டணியை உடைக்க பல்வேறு வேலைகள் நடக்கின்றன. இத்தனைக்கு மத்தியிலும் தமிழகத்தில் இந்தியா கூட்டணி திமுக தலைமையில் முழு பலத்துடன் இருக்கிறது. அந்த தைரியத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையையும் திமுக – காங்கிரஸ் நடத்தி முடித்துள்ளது.

இந்த சூழலில்தான், திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் பேச்சு இங்கேயும் இந்தியா கூட்டணிக்குள் குமைச்சலை உண்டாக்கி இருக்கிறது. புதுச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ கண்ணப்பன், “காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு சீட் வாங்குவதற்காகவே நடத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் அவர்கள் எட்டிப் பார்ப்பதால் மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை” என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை
ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை

“5 மாநில தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியாததால் காங்கிரஸ் கட்சியின் கேட்கும் சக்தி குறைந்துவிட்டது. அதனால் தான் சமாஜ்வாதி, திரிணமூல், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தொகுதிகளை குறைத்து கொடுத்து கழட்டிவிடப் பார்க்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ் 10, 15 என தங்களின் சக்தியை உணராமல் தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது” என திமுக தலைமையிடம் சில அமைச்சர்கள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2019-ல் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 9-ல் வென்றது. இம்முறை கூடுதலாக சில தொகுதிகளையாவது பெறவேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் திமுகவோ, காங்கிரசுக்கு இம்முறை 6 அல்லது 7 தொகுதிகளை மட்டுமே கொடுக்கக்கூடிய மனநிலையில் இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போதே காங்கிரசிடம் இது தெளிவுபடுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மல்லிகார்ஜுன கார்கேயுடன் 
ஸ்டாலின்...
மல்லிகார்ஜுன கார்கேயுடன் ஸ்டாலின்...

சென்னையில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்ற குரல்களும் காங்கிரசுக்குள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. அதேபோல் கடந்தமுறை காங்கிரஸ் போட்டியிட்ட சில தொகுதிகளில் இப்போது திமுக களமிறங்க விரும்புகிறது. எனவே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டாலும், நிதி, ஆள் திரட்டல் உள்ளிட்டவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டது திமுகதான். இதனை அமைச்சர் ராஜ கண்ணப்பனே ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார்.

அப்படியிருக்கையில் காங்கிரசுக்கு சீட்டும் கொடுத்து, செலவும் பார்த்து, பிரச்சாரமும் செய்து வெற்றிபெற வைப்பதற்கு பதிலாக நாமே குறிப்பிட்ட தொகுதிகளில் களமிறங்கிவிடலாம். எனவே காங்கிரசுக்கு அதன் சக்திக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச தொகுதிகளை ஒதுக்கினால் போதும் என்பதே இப்போதைக்கு திமுகவின் மனநிலை.

மக்களவைத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் களமிறங்கவேண்டும் என திமுக நினைக்கிறது. எனவே இம்முறை கடந்த முறையைப் போல தொகுதிகளை எதிர்பார்க்கவேண்டாம் என கூட்டணி கட்சிகளிடம் அது அறிவுறுத்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. திமுகவின் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்பட போவது காங்கிரஸ் கட்சிதான்.

கடைசி நேரத்தில் தேசிய தலைமை வழியாகப் பேசி கடந்தமுறை பெற்ற தொகுதிகளையாவது தக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது காங்கிரஸ். ஆனால், யார் பேசினாலும் இவ்வளவுதான் என்பதில் திடமாக இருக்கிறது திமுக.

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவு தலைவர், “ பாஜகவும் காங்கிரசும் நேரடியாக போட்டியிடும் மாநிலங்களில் எங்களுக்கு பெரிதாக எந்தச் சிக்கலும் இல்லை. மற்றபடி மேற்கு வங்கம், கேரளா, உ.பி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பிரச்சினை உள்ளது உண்மைதான். உ.பியில் சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ளது, அவர்கள், காங்கிரசுக்கு 11 இடங்கள் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.

காங்கிரசின் இலக்கு என்பது பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான். அந்தவகையில் காலப்போக்கில் எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே மனமாற்றம் ஏற்படும். மேற்கு வங்கத்தில் நாங்கள் வென்றாலும் சரி, மம்தா வென்றாலும் சரி பாஜகவை வலுவாக எதிர்க்கவேண்டும். ஆனால், மம்தா எடுக்கும் முடிவால் பாஜக வெற்றிபெற்றுவிடக்கூடாது. இதனை அவர் சிந்திக்க வேண்டும்.

ஆம் ஆத்மியிலும் மனமாற்றம் வந்து பாஜகவை எதிர்த்து வலுவாக போட்டியிடுவோம். கேரளாவில் பெரும் போட்டியே காங்கிரஸ் - சிபிஎம் இடையேதான். அங்கே நாங்கள் இணைந்தால் பாஜக வளரும். எனவே, அங்கே சிபிஎம் - காங்கிரஸ் எதிரெதிராக போட்டியிட்டு பாஜகவை துடைத்தெறிவோம்.

கோபண்ணா
கோபண்ணா

தமிழகத்தில் 21 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதாக உத்தேசப்பட்டியல் வெளியானது உண்மைக்கு மாறான தகவல். தமிழகத்தில் கூட்டணி குறித்து திமுக – காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். கடந்தமுறை காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் எங்கள் வேட்பாளர்கள் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

எல்லாக் கட்சிகளிலுமே சில தலைவர்கள் தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்தி கருத்துச் சொல்வது சகஜமானது. எங்கள் கட்சியில் கூட அதிக தொகுதிகள் கேட்கவேண்டும் என சில தலைவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் காங்கிரசின் பலத்தை கணக்கில் கொண்டு உரிய தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்று நம்புகிறோம்” என்றார் உறுதியாக.

நாற்பதும் நமதே என்ற இலக்குடன் களத்துக்கு வரும் திமுகவுக்கு உதயசூரியன் வேட்பாளர்கள் எப்படியும் வென்றுவிடுவார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு சக்திக்கு மீறிய தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து அதன் மூலம் பாஜகவுக்கோ, அதிமுகவுக்கோ அந்தத் தொகுதிகளில் வெற்றிமுகத்தைக் காட்டிவிடக்கூடாது என்பதே திமுகவின் கவலை.

“அடுத்த பிரதமரை அடையாளம் காட்டும் இடத்தில் நாங்கள் இருப்போம்” என்று சொல்லும் திமுகவின் இந்தக் கவலை நியாயமானது தான் என்றாலும் இந்தியா கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கட்டிக்காக்க திமுகவும் சில தியாகங்களுக்கு தயாராகவே இருக்க வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in