2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணித் தொடரும்: சென்னையில் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

மல்லிகார்ஜுன கார்கே- மு.க.ஸ்டாலின்
மல்லிகார்ஜுன கார்கே- மு.க.ஸ்டாலின் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணித் தொடரும்: சென்னையில் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் அவர் எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை" என்றார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், "ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். உங்கள் தந்தையும், என் தந்தையும், ஒரு சிறந்த இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்டனர். நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள். உங்கள் மாநிலத்தின் வளர்ச்சியைத் தேசிய அளவில் காட்டுங்கள்" என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பவராக ஸ்டாலின் விளக்குகிறார். எப்பொழுதுமே தமிழ்நாடு முற்போக்கு சமுதாயமாக இருந்து வந்துள்ளது. ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவை மறக்க முடியாது. தொழில்துறை நலன், மக்கள் நலனில் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது தமிழ்நாடு.

பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான மனோபாவத்தை வளர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு எப்போதும் முன்னோடியான மாநிலம். சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூகநீதியை காப்பதில் காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்படும்.

பாஜக அரசின் கொள்கைகளால் 23 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்திய ஒற்றுமை பயணம் மாபெரும் வெற்றி பெற்றது. ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணத்தை காஷ்மீரில் பரூக் அப்துல்லா முடித்து வைத்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களின் அராஜகங்கள் தொடர்கிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணி 2004, 2009-ல் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமராக போவது யார் என்பதை நாம் இப்போதைக்கு மறந்து விடுவோம். யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமல்ல. ஒன்று சேர்ந்து அரசியல் அமைப்பை காப்பாற்ற முன்வர வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in