கல்வெட்டில் பெயர் வைப்பதில் தகராறு: கற்களாலும் கட்டையாலும் தாக்கிக் கொண்ட திமுகவினர்!

கல்வெட்டில் பெயர் வைப்பதில் தகராறு: கற்களாலும் கட்டையாலும் தாக்கிக் கொண்ட திமுகவினர்!

புதிய அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைக்கும் பிரச்சினையில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திம்ம சமுத்திரம் கிராமத்தில் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அந்த அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழாவிற்காக, கல்வெட்டு வைக்க வேண்டும் என 8-வது வார்டு உறுப்பினர் பிரியாவின் கணவர் அம்சநாதன், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தேவேந்திரன், ' நீங்கள் வார்டு உறுப்பினர் கிடையாது, என்னுடைய பணிகளில் ஏன் தலையிடுகிறீர்கள்?' எனக் கேட்டிருக்கிறார். இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அம்சநாதன் மற்றும் அவர் குடும்பத்தினரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த அம்சநாதன் மற்றும் பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று மதியம் வீடு திரும்பினர்.

இதைத் தெரிந்து கொண்ட தேவேந்திரன் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அடிதடியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கட்டை மற்றும் கற்களால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனின் உறவினர்கள் தாக்கியதில் வார்டு உறுப்பினர் பிரியா மற்றும் அவரது கணவர் அம்சநாதன் உள்ளிட்ட ஆறுபேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருதரப்பினரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in