திமுக மீனவரணியின் முன்னாள் அமைப்பாளரான நசரேத் பசிலியான் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆளும்கட்சியில் இருப்பவர்கள், முக்கிய புள்ளியாக வலம் வருபவர்கள் அவ்வளவு எளிதாக எதிர்க்கட்சியில் இணையமாட்டார்கள். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க இவையெல்லாம் சாத்தியம் என்பதற்கு அடையாளமாகவும் திமுக தலைமைக்கு ஷாக் கொடுக்கும் வகையிலும் திமுகவின் முக்கிய நிர்வாகியான நசரேத் பசிலியான் அதிமுகவில் இணைந்துள்ளார்.
திமுக மீனவரணியின் முன்னாள் அமைப்பாளராக இருந்தவர் நசரேத் பசிலியான். ஒவ்வொரு தேர்தல்களிலும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு மனுதாக்கல் செய்யும் பசிலியானுக்கு மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ் ராஜன், இப்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் மேயர் மகேஷ் ஆகியோரின் ஆசி இல்லாததால் சீட் கிடைக்காமல் போய்விடுவது வாடிக்கையாக இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மகேஷிடம் இருந்து ஒதுங்கி, அமைச்சர் மனோ தங்கராஜுடன் இணைந்து செயல்பட தொடங்கினார் பசிலியான். மனோ தங்கராஜ் ஆதரவால் மீனவரணி செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என நினைத்தவருக்கு அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கட்சி பணிகளிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தவரை தளவாய் சுந்தரம் மூலம் தட்டித்தூக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
வரும் மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தவிர சொல்லிக் கொள்ளும் வகையில் ஆட்கள் யாரும் இல்லாததால் பசிலியானுக்கு எம்.பி. சீட் தூண்டில் போட்டு பிடித்துள்ளார் எடப்பாடியார். பசிலியான் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என எதிர்பார்த்த திமுகவினருக்கு அவரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மீனவரணி முன்னாள் அமைப்பாளரான பசிலியான் அதிமுகவில் இணைந்த விவகாரம் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும் திமுகவின் மாநில மீனவணி துணைச் செயலாளருமான ஆஸ்டின் அதிமுகவில் இணைந்ததாக காலை முதல் செய்திகள் பரவின. ஆஸ்டினே அதை மறுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதால் அந்தப் பரபரப்பு சற்றுமுன்னர் அடங்கியது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்