
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், கரூர் மாவட்ட திமுகவில் கோஷ்டிப்பூசல் தலைதூக்கியுள்ளது, திமுக நிர்வாகி ஒருவரின் ராஜினாமா கடிதத்தால் தெரியவந்துள்ளது.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளரான லோகு அறிவித்திருக்கிறார். தன்னால் பதவிக்காக ஆமாஞ்சாமி போட முடியாது என்று கடிதத்தில் கூறியுள்ள லோகு, அமைச்சர் இல்லாத ஊரு, அச்சாணி இல்லாத தேரு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவுக்கு அவர் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'சமீபகாலமாக மாவட்ட அணி அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் எந்த ஒரு தகவல்களும் என்னிடம் கூறுவது இல்லை. எனது பணியை எனக்கு அடுத்தபடியாக உள்ள நிர்வாகிகளிடம் சொல்கிறார்கள். கழகத்திற்காக என்மீது சுமத்தப்பட்ட வழக்குகளுக்கு இன்று வரை நீதிமன்றத்திற்கு சென்று வாய்தா பெற்றுக் கொண்டுதான் உள்ளேன்.
சில கழக நிகழ்ச்சிகளில் கரூர் மாவட்டத்தில் தான் அரவக்குறிச்சி தொகுதி உள்ளதா, இல்லை மாவட்ட அணி நிர்வாகிகள் மறந்து விட்டார்களா என்ற கேள்விகளும் என்னுள் எழுந்துள்ளது. தற்போது கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி, அமைச்சர் இல்லாத ஊரு அச்சாணி இல்லாத தேரு போல உள்ளது. இவர்களுடன் பயணிப்பது மிகக்கடினம். இந்த பொறுப்பிற்காக அவர்களிடம் ஆமாம் சாமி போட என்னால் இயலாது.
அதிமுக அடிமைகள் போல என்னால் இவர்களுடன் இருக்க இயலாது. எனது உழைப்பிற்கு இல்லாத பதவி நடிப்பவருக்கே எனும் சூழ்நிலை தற்போது உள்ளது. ஆதலால், நான் தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் இந்த ராஜினாமா விவகாரம் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!
HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!