இந்த 2 ஆண்டு ஆட்சி காலத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு துரும்பைக் கூட திமுக கிள்ளிப்போடவில்லை. எனவே, திமுககாரர்கள் கூனி குறுகிதான் வாக்கு சேகரிக்கமுடியும் என்று முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஈரோட்டில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், " ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வாய்ப்பு வழங்கிய தமாகாவிற்கும், ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே எதிர்பார்க்கிறது. எனவே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். அதற்கு மக்கள் பாராட்டும் அளவுக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டும். சிலர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று கூறி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அதிமுக கரைவேட்டிகள் அவர்கள் கண்களுக்குத் தெரியும். கருத்து வேறுபாடுகளை மறந்து எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து வெற்றி பெற வேண்டும்.
இந்த 2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்குத் தொகுதிக்கு துரும்பைக்கூட திமுக கிள்ளிப்போடவில்லை. எனவே, திமுககாரர்கள் கூனி குறுகிதான் வாக்குசேகரிக்க முடியும். ஆனால், அதிமுககாரர்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம். அதிமுக செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களைக் கூட திமுகவினர் நிறுத்தி விட்டனர். ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு 485 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அதிமுக கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக திமுக நிறுத்துகிறது. மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசு. இதனால் 564 பேர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் மருத்துவப் படிப்பு செலவுகளையும் அதிமுக ஏற்றது.
திராவிட மாடல் என்பது அதிமுக கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான். 3 நாட்களுக்குள் வாக்காளர்கள் விவரங்களை தொகுதி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும். நமக்கு சோதனை புதிதல்ல. பல சோதனைகளை வென்ற இயக்கம். சிலர் எட்டப்பன்களாக மாறி எட்டப்பன் வேலை செய்து இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என்று எதிரிகளோடு பணி செய்து வருகின்றனர். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். சிலர் எப்படியாவது அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அதிமுகவைத் தோற்கடித்த வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் வெற்றி நிச்சயம்" என்றார்.