விலைவாசியை சமாளிக்க முடியாத திமுக, மத்திய அரசு மீது பழிபோடுகிறது: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விலைவாசியைச் சமாளிக்க முடியாத திமுக அரசு, வழக்கம் போல மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய திமுக அரசு, ஊழல் வழக்கில் கைதாகி மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவது பற்றிதான் கவலைப்பட்டு கொண்டிருக்கிறது என பாஜகவின் மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்த மத்திய அரசு தவறிவிட்டது என திமுக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காஸ் விலைக்கு நிகராக தக்காளி விலை சென்றுவிடாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவின் மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘’அத்தியாவசியப் பொருட்களுக்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும். திடீர் மழை, விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்க முடியாத திமுக அரசு, வழக்கம் போல மத்திய அரசு மீது பழிப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது.

மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய திமுக அரசு, ஊழல் வழக்கில் கைதாகி மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவது பற்றிதான் கவலைப்பட்டு கொண்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உலக அளவிலான பொருளாதார மந்தநிலை, கொரோனா பேரிடர் போன்ற எதிர்பாராத நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளித்து, உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. 2004-ம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு விடை பெறும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 34 ஆக இருந்தது. ஆனால், 2014-ம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு விடைபெறும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72 ஆக உயர்ந்தது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96 ஆக (உத்தரப்பிரதேசம், புதுச்சேரி போன்ற பல மாநிலங்களில்) உள்ளது. தமிழகத்தில் திமுக அரசு விதித்த வரி காரணமாக பெட்ரோல் விலை பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், புதுச்சேரியைவிட ரூ.6 அதிகமாக ரூ.102 ஆக உள்ளது. 2013-14-ல் ரூ.74,920 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2023-ல் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சராசரி சில்லறை பணவீக்கம் 2005-2014 காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது 8.7 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் 4.8 சதவீதத்தோடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் ஊழலற்ற, வெளிப்படையான, திறமையான நிர்வாகமே இதற்கு காரணம்.

தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசி, துவரம் பருப்பு, தக்காளி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. தக்காளி வெங்காயம் காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்களின் விலை ஓராண்டு சரிந்தால், அடுத்த ஆண்டு அதனை பயிரிடுவதை பல விவசாயிகள் தவிர்த்து விடுகிறார்கள்.

மழைக்காலம் அல்லாத காலங்களில் திடீர் திடீரென பெய்யும் மழையும் பயிர்களை அழித்து விடுகிறது. விலை உயர்வுக்கு இதுவும் காரணம். இவற்றை தவிர்க்க தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் எல்லா காலங்களிலும் சீரான விலையில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து மாவட்டங்களிலும் குளிப்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். பருவம் தப்பி மழை பெய்யும் போது அதனால் பயிர்கள் சேதம் அடையாமல் பாதுகாக்க தொழில்நுட்ப வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அந்த உணவுப் பொருட்களை, தமிழகத்திலேயே முழுமையாக விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமானால், அவர்களிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் தமிழக அரசே விற்பனை செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக, நம் தமிழகத்திலேயே கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய் வழங்கலாம். துவரம் பருப்பு ,உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளையும் தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்து ரோஷன் கடைகளில் வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைந்து மக்களும் பயனடைவார்கள்.

அதை விடுத்து மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அதனை மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே இது தொழில்நுட்ப யுகம். எது உண்மை? எது பொய்? என்பதை மக்கள் நன்கறிவார்கள். எனவே, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்விலும் அரசியல் , விலை உயர்வை தடுக்கவும், எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்கவும் திமுக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in