மோடிக்கு மணிப்பூருக்கு பிளைட் டிக்கெட்; ஸ்டாலினுக்கு வேங்கை வயலுக்கு பஸ் டிக்கெட்: சமூக வலைதளத்தில் வலுக்கும் சண்டை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மணிப்பூர்,  வேங்கை வயல் விவகாரங்களை  மையமாக வைத்து பாஜகவும், திமுகவும் தமிழ்நாட்டில் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ளும் விவகாரம் மக்களிடையே  சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மணிப்பூரில் சமீபத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்தது. 'மணிப்பூருக்கு பிரதமர் மோடி போகாதது ஏன்?' என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதை சுட்டிக்காட்டும் விதத்தில் பிரதமருக்கு 'ஃப்ளைட் டிக்கெட்' எடுத்திருப்பதுபோல கிண்டலாக வடிவமைத்து, டிக்கெட் மாதிரியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது திமுக ஐ.டி. விங்.

மாதிரி டிக்கெட்டில் 'இண்டிகோ' விமான நிறுவனத்தின் பெயரை 'மோடிகோ' என்று குறிப்பிட்டு, பயணியின் பெயராக மோடி மற்றும் தொழிலதிபர் அதானியை இணைத்து 'மோதானி' என்று குறும்பு காட்டியிருந்தனர். அமலாக்கத்துறை ரெய்டுகளை குறிக்கும் வகையில், சீட் எண்ணின் சீரியல் வரிசை 'ED' என்று தொடங்குகிறது. 'உங்க ஓனருக்கு ஃப்ளைட் டிக்கெட் போட்டிருக்கோம். போகச் சொல்லுங்க' என்று பாஜகவினருக்கு அதில் அறிவுரையும் இருந்தது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதைப்பார்த்த பாஜக ஐ.டி. விங், திமுகவுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.  முதல்வர் ஸ்டாலினுக்கு வேங்கைவயலுக்கு பஸ் டிக்கெட் எடுத்திருக்கும் பாஜக அதை பகிர்ந்துள்ளது. வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 300 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை சுட்டிக்காட்டும் வகையில் இந்த பஸ் டிக்கெட்டை தயாரித்துள்ளனர்.

சமூக நீதி டிராவல்ஸ் கம்பெனியின் 'ரெட் ஜெயன்ட் பஸ்ஸில் சென்னை செனடாப் ரோடிலிருந்து நேராக வேங்கைவயல் வாட்டர் டேங்குக்கே டிக்கெட் 'புக்' செய்துவிட்டனர். பயணியின் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று போட்டு, சீட் நம்பராக '2ஜி' என இவர்களும் குசும்பு காட்டியுள்ளனர்.

அத்துடன் 'டிக்கெட் கட்டணத்தை தமிழக பாஜக முழுமையாக செலுத்திவிட்டது. உங்க ஓனரை போய்ட்டுவரச் சொல்லுங்க' என்று திமுக பாணியிலேயே கோரிக்கையும் விடப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து வேங்கைவயலுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.200 என்று குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைதளத்தில் திமுக, பாஜகவினரிடையே நடக்கும் இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in