திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணிக்கின்றன: காரணம் இதுதான்

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணிக்கின்றன: காரணம் இதுதான்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன்  இன்று  தொடங்க உள்ள நிலையில்  ஆளுநர் உரையை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

இந்த ஆண்டுக்கான முதலாவது சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழக  ஆளுநர் உரையுடன்  இன்று தொடங்குகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கை குறித்து சபாநாயகர்  உரிய முடிவு அறிவிக்காததால் அதை கண்டித்து ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவில் உள்ளனர்.

இந்த நிலையில்  திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளன.  தமிழ்நாடு குறித்தும் திராவிடம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமிழக  ஆளுநர் தொடர்ந்து தெரிவித்து வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் அண்மையில் ஆளுநர் மாளிகையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி,  தமிழ்நாடு என்று அழைப்பதைவிட  தமிழகம் என்று அழைப்பது சிறந்ததாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.  இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.  திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமில்லாது திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இதற்காக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் திராவிடம் ஆகியவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக  சட்டமன்றத்தில் அவரது  உரையை புறக்கணிப்பது என திமுகவின் தோழமைக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.  காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும்  இன்றைய கூட்டத்தை அதாவது  ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

இதன் மூலம் இன்று சட்டமன்ற  கூட்டத்தில் திமுக  உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். பாமக தரப்பில் எதுவும் அறிவிக்கப்படாததால் அந்த உறுப்பினர்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது.  ஆளுங்கட்சியைத் தவிர  சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான  அரசியல் கட்சிகளும் ஆளுநர் உரையை புறக்கணிப்பது ஆளுநர் வட்டாரத்தில் பெரும்  அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in