
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
மேலும், ‘இந்த தேர்தலில் முழு கவனத்தையும் செலுத்தி விஜயகாந்திற்கு வெற்றியை தேடித் தருவோம்.விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாரா என்பதை பின்னர் அறிவிப்போம்’ எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.