கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் பதில்!

டிகே சிவக்குமார்
டிகே சிவக்குமார்அடுத்த கர்நாடக முதல்வர் யார்? - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் பதில்!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும், முடிவுகள் வெளியானதும் கட்சித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து முடிவெடுப்பார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட 120 இடங்களைக் கைப்பற்றி அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒக்கலிக்கா சமூக மக்கள் அதிகளவில் வாழும் மண்டலத்தில் காங்கிரஸ் 23-24 இடங்களை கைப்பற்றும் சர்வேக்களில் கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டி.கே.சிவக்குமார், “நான் எந்த பதவிக்கும் போட்டியாளராக இல்லை. காங்கிரஸ் என்னை மாநில தலைவராக்கியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து முதல்வர் யார் என்று முடிவெடுப்போம். மாநிலத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதுதான் முன்னுரிமை. உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது என்றும் எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர். பாஜக மக்களை வகுப்புவாத ரீதியில் பிரிக்க முயன்றனர், நாங்கள் அதனை செய்யவில்லை. ஊழலற்ற அரசு, வளர்ச்சி சார்ந்த அரசு, சிறந்த பெங்களூரு மற்றும் உலகளாவிய கர்நாடகத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசையே கர்நாடக மக்கள் விரும்புகிறார்கள்”என்று அவர் கூறினார்.

பாஜகவின் பஜ்ரங்பலி முழக்கம், பஜ்ரங்தளம் போன்ற தீவிர அமைப்புகளைத் தடை செய்யும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியை பிரச்சாரத்தை கடைசிக் கட்டத்தில் அசைத்ததா என்ற கேள்விக்கு, “ நான் எந்த நேரத்திலும் அசைக்கப்படவில்லை. ஊடகங்கள் பஜ்ரங்தள் பிரச்சினையை எடுத்தன. ஆனால் அது பிரச்சினை அல்ல. விலைவாசி உயர்வு மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் மக்களை பாதிக்கிறது. உத்தரபிரதேசம் மற்றும் பிற வட இந்திய மாநில மக்களைப் போல் கர்நாடக மக்களை முட்டாளாக்க முடியாது” என்று கூறினார்.

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 122-140 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. பாஜக 62-80 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20-25 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 0-3 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in