செல்லூர் ராஜூவுக்கு எதிராக களமிறங்கும் 4 பேர்: சூடுபிடிக்கும் அதிமுக உட்கட்சி தேர்தல்

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூபடம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு எதிராக 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் மதுரை அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்துவருகிறது. மதுரை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக தலைமைக் கழகம் நியமித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இன்று வேட்புமனுக்களைப் பெற்றார். முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சார்பில் அவரது மருமகன் வேட்புமனு கொடுத்தார். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலாளராக இருக்கும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று கருதப்பட்ட நிலையில், இன்று திடீரென முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து, முன்னாள் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் உள்பட 4 பேர் திடீரென வேட்புமனு கொடுத்தனர்.

அதைச் சற்றும் எதிர்பார்க்காத வளர்மதி, நான் மதியம் சாப்பிட்டுவிட்டு வந்து மனு வாங்குகிறேன் என்று எழுந்து செல்ல முயன்றார். ஆனால், விடாப்பிடியாக அவரை மனு வாங்க வைத்தார்கள் அந்த நிர்வாகிகள். வேட்புமனு கொடுத்த 4 பேருமே பலமான பின்னணி கொண்டவர்கள் என்பதால், வேறுவழியின்றி அவர் வேட்புமனுவைப் பெற்றார். இதில் சரவணன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவோடும், சாலைமுத்து முன்னாள் மேயர் ராஜன்செல்லப்பா ஆதரவுடனும் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

செல்லூர் கே.ராஜூ கடந்த 17 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருக்கிறார். ஜெயலலிதா காலத்திலேயே அவரை மாற்றச் சொல்லி குரல்கள் எழுந்ததுண்டு. குறிப்பாக திடீர்நகர் பால்பாண்டி கொலையில் அவரைத் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆயினும் ஜெயலலிதாவின் தனிப்பட்ட கருணையால் மாவட்ட செயலாளராகவும், அதே துறையின் அமைச்சராக 2-வது முறையாகவும் தொடர்ந்து இருந்தார் செல்லூர் ராஜூ.

ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு, அதுவரையில் அடங்கியிருந்தவர்கள் எல்லாம் செல்லூர் ராஜூவுக்கு எதிராக வெளிப்படையாகவே அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள். குறிப்பாக சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலின்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இதில் தீவிரம் காட்டினார்கள். எனவே, இம்முறை யாருடைய சமாதானத்தையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். செல்லூர் ராஜூவின் பதவியைப் பறிக்காமல் விடமாட்டார்கள் என்று மதுரை அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு ஏதாவது நடந்தால் அவர் வெளிப்படையாகவே சசிகலாவை ஆதரிக்கத் தொடங்கிவிடுவார். எனவே, இந்த விவகாரத்தில் பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதே மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதற்கிடையே மதுரை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டை ஆள்வது அதிமுகதான் என்று சொல்லும் அளவுக்கு ஆளும் கட்சியைப் போல மிக வேகமாக சுறுசுறுப்பாக ஜனநாயக முறைப்படி அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெற்றுவருகிறது. அமைப்புத் தேர்தல் அனைத்து இடங்களிலும் தலைமை கழக அறிவிப்பின்படி நடைபெற்றுவருகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகிறது. பெறப்பட்ட விருப்ப மனுக்களில் ஒருங்கிணைப்பாளர்கள் இறுதியாக யாருக்கு என்ன பதவி என்பதை முடிவு செய்வார்கள்" என்றார்.

அதிமுக சசிகலா கைக்குப் போய்விடும் என்கிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது. வெட்ட வெளிச்சமாக அ.தி.மு.க.வுக்கு யார் பொறுப்பானவர்கள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளைகளை எல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு மூலம் வழங்கி இருக்கிறது. எனவே அவர் (சசிகலா) குறித்து பேசுவதற்கு வழியில்லை. எம்.ஜி.ஆர். எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அ.தி.மு.க. கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அங்கேயேதான் அ.தி.மு.க. இருக்கிறது. வேறு எங்கும் அ.தி.மு.க. செல்லவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in