ஈபிஎஸ்ஸுக்கு எதிராக மனு தள்ளுபடி: மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக ஆர்.எஸ்.பாரதிக்கு அறிவுறுத்தல்

ஈபிஎஸ்ஸுக்கு எதிராக மனு தள்ளுபடி: மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக ஆர்.எஸ்.பாரதிக்கு அறிவுறுத்தல்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என பாரதிக்கு அறிவுறுத்தியுள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டம்; திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டம்; சென்னை வண்டலூர் - வாலாஜா ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் திட்டம் ஆகியவற்றிலும்; திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகள் ஆகிய திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த திட்டங்களை முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன் செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் தண்டிக்க வேண்டுமென புகாரில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுக்காததால், தனது புகாரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து முதல்வராக இருந்த பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கை சீலிடப்பட்ட அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டிருந்து. புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் வாய்மொழி தகவலாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படியும் பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

2018-ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம். விசாரணை நடைபெற்று தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018-ல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்த விசாரணை நடத்திய கூடுதல் கண்காணிப்பாளர், புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியோர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கோ, சுயலாபம் அடைந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளதாகவும், அதை இயக்குநர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த அனுமதி அளித்தது ஏன் என்பதற்கு எந்தவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இடைப்பட்ட காலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தவிர, வேறு எந்தவித மாற்றமும் நிகழாத நிலையில், இந்த வழக்கில் மீண்டும் புதிதாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும், அரசு என்பது சட்டப்படி ஒன்று தான், எந்த கட்சி அதிகாரத்திற்கு வருகிறது என்பது முக்கியமல்ல எனும் குறிப்பிட்டுள்ள நீதிபதி, அரசு எடுத்த முடிவை எந்த காரணங்களும் இல்லாமல் மாற்றவும் முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தனி நபரின் அல்லது அரசியல் கட்சியின் அரசியல் செயல் திட்டம் சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தி விடக்கூடாது என எச்சரித்துள்ள நீதிபதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் இயல்பை இழந்துவிட்டதாகவும், ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பிறப்பிக்கும் உத்தரவுப்படிதான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டுகளுக்காக, நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவுகள் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விவாத பொருளாக மட்டுமே நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஏழை வழக்காடிகளுக்கான நீதிமன்றத்தின் நேரம் என்பது, இதுபோன்ற வழக்குகளால் விழுங்கப்படுகின்றன என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையால் 2018-ல் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறைகளை காண முடியாது என்றும், புதிய விசாரணை நடத்துவதற்கு எந்த காரணமுமில்லை எனவும், ஆட்சி மாற்றம் காரணமாக மட்டுமே உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறி, ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இருந்த போதிலும், புகார்தாரர் பாரதி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in