டெல்லி தலைமைச் செயலாளரை உடனே பணிநீக்கம் செய்யுங்கள் - முதல்வர் கேஜ்ரிவால் பரிந்துரை!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் , அம்மாநில தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரை உடனடியாக பணிநீக்கம் செய்யும்படி, அமைச்சர் அதிஷி அளித்த விரிவான அறிக்கையை துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனாவுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்காக ரூ.850 கோடி அளவில் நிலமோசடி ஊழலில் ஈடுப்பட்டிருப்பதாக சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறை அமைச்சர் அதிஷி, விசாரணை அறிக்கை அளித்திருந்தார்.

மொத்தம் 670 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விரிவான விசாரணை அறிக்கையில், துவாரகா விரைவுச்சாலை திட்டத்துக்காக பாம்னோலி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்திய நிலத்தில் ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார்
டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார்

கடந்த 2015ம் ஆண்டு நரேஷ் குமாரின் மகன் தொடர்புடைய நிறுவனம் அந்த நிலத்தை ரூ.75 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. பின்னர் விரைவு சாலைத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது மிக அதிகமான விலை கொடுக்கப்பபட்டுள்ளது இதனால் அவர்களுக்கு ரூ.850 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தலைமைச் செயலாளர் தனது மகன் கரண் சவுகான் தொடர்புடைய பல நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், விரைவு சாலைத் திட்டத்தின் மூலம் பயனடையும் நில உரிமையாளர்களுடன் கரண் சவுகானுக்கு வணிகத் தொடர்புகள் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்புடைய கோப்புகளை கோட்ட ஆணையர் அஸ்வின்குமார் தரமறுப்பது அவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தீவிரமான குற்றச்சாட்டுகள் காரணமாக தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் மற்றும் கோட்ட ஆணையர் அஸ்வின் குமார் இருவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து இருவர் மீதும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி அமைச்சர் அதிஷி

மேலும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஊழலில் டெல்லியின் விஜிலென்ஸ் துறை, தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்டோர் நிலத்தின் மதிப்பினை குறைத்து மதிப்பிட்ட சதி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான ஆரம்பக்கட்ட இழப்பீடு முதலில் ரூ.312 கோடி என மதிப்பிடப்பட்டது. பின்னர் இது கணிசமாக குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. இதன்மூலம் உண்மையில் வழங்கப்பட்ட இழப்பீடு மூலமாக பயனாளிகள் ரூ. 850 கோடி வரை ஆதாயமடைந்திருக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு அனுப்புமாறு அமைச்சர் அதிஷியிடம் கூறியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in