இப்படி நடந்திருப்பது கட்சிக்குத்தான் கெட்டபெயராக இருக்கும்!

- ரூபி மனோகரன் விவகாரத்தில் மனம் திறக்கும் கே.ஆர்.ராமசாமி
இப்படி நடந்திருப்பது கட்சிக்குத்தான் கெட்டபெயராக இருக்கும்!

காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் சத்தியமூர்த்தி பவனில் நடந்த அடிதடி குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின்  ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் அவகாசம் கேட்டதால் அவரை அதிரடியாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது கே.ஆர்.ராமசாமி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு.

மாலையில் இடைநீக்க அறிவிப்பு வெளியான நிலையில்  அன்று இரவே மனோகரனின் இடை நீக்கத்தை ரத்து செய்தார் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ். இவ்விரண்டு நடவடிக்கைகளும் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாயிடம் பேசினோம்.

ரூபி  மனோகரன் மீதான  உங்கள் நடவடிக்கை எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது? 

அவர் மீதான குற்றசாட்டுக்கு விளக்கம் தருவதற்காக ஒழுங்கு நடவடிக்கைக்  குழுவின் முன்பாக ஆஜராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல், கடிதம் அனுப்பியது தவறு என்று சொல்லித்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிறகு ஏன் அந்த நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டது?

எங்களோட நடவடிக்கைக்கு அவங்க (தினேஷ் குண்டுராவ்)  ஸ்டே கொடுத்து இருக்காங்க. அதுக்கப்புறம் விசாரித்து அடுத்த நடவடிக்கையை எடுப்பாங்க.

ரூபி மனோகரன்
ரூபி மனோகரன்

என் மீதான ஒழுங்கு நடவடிக்கை குழுவின்  நடவடிக்கை தவறானது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ரூபி மனோகரன்  சொல்லியிருக்கிறாரே?

அவர் தவறு செய்தாரா, இல்லையா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. அதற்குள்ளே நாங்கள் போகவில்லை.  ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முன்பாக ஆஜராகாமல் கடிதம் அனுப்பியது தவறு என்றுதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவாக தன் மீது ஒரு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனோகரன் குற்றம் சுமத்தியுள்ளாரே..?

அவர் சொல்லலாம்.  நாங்கள் ஏன்  அப்படி நடக்கப்போகிறோம். எங்களுக்கு எந்தச் சார்பும் இல்லை. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பாக ஆஜராகவில்லை;  அது தவறு என்று சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை வரவழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே தவிர அவரை கட்சியிலிருந்து  நீக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் அல்ல; அது எங்கள் வேலையும் இல்லை. அதனால்தான் திரும்பவும் அவர் வந்து ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அறிவித்தோம்.

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே இப்படி விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்று ரூபி மனோகரன் சொல்கிறாரே?

ஏன், பல முறை இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு உதாரணங்கள்  உள்ளன. 

நீங்கள் எடுத்த நடவடிக்கையை உடனடியாக கட்சி மேலிடம் ரத்து செய்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

எங்கள் முன்பு  ஆஜராகவில்லை என்பதால் நாங்கள் ஒரு நடவடிக்கை எடுத்தோம். எனினும்  அதை நிறுத்தி வைக்கும் உரிமை தலைமைக்கு உண்டு.  அதைச் செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.

தினேஷ் குண்டுராவ்
தினேஷ் குண்டுராவ்

அப்படியானால் உங்களுடைய நடவடிக்கை தவறு என்பது போல் தோற்றம் ஆகிவிடாதா? 

அது எப்படி தவறாகும்?  எங்களுடைய நடவடிக்கையில் தவறில்லை. 

இந்தச் சிக்கல் வராமல் இருக்க தினேஷ் குண்டுராவ்  உள்ளிட்டவர்களிடம்  ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுத்திருக்கலாமே. அப்படிச் செய்திருந்தால்  தேவையற்ற குழப்பங்கள் வந்திருக்காது இல்லையா? 

நான் மூன்று முறை தினேஷ் குண்டுராவிடம் இது குறித்து ஆலோசனை செய்திருக்கிறேன்.  அப்போது அவர் இது பற்றி உறுதியாக எதையும்  சொல்லவில்லை. அதனால்தான்  நாங்கள் இந்த நடவடிக்கை எடுத்தோம். அதற்குப் பிறகு அவருக்கு ஏதாவது வழிகாட்டுதல் வந்திருக்கலாம்.  அதன்படி அவர் நடந்திருக்கலாம். அதைப்பற்றி ஒன்றும் சொல்லமுடியாது.

மனோகரன் மீது தவறு இருக்கிறது என்பதற்காக நாங்கள் அவரை இடை நீக்கம் செய்யவில்லை.  அதேபோல், அவர் தவறு செய்யவில்லை என்பதற்காக இடை நீக்கம் ரத்துசெய்யப்படவும் இல்லை. இனிமேல் விசாரிப்பார்கள்.  விசாரித்து அவர் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

கே.ஆர்.ராமசாமி
கே.ஆர்.ராமசாமி

உங்களது நடவடிக்கையை ரத்து செய்திருப்பதன் மூலம் நீங்கள் தவறு இழைத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்திருப்பதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? 

எங்களது நடவடிக்கையில் எந்தத் தவறும் இல்லை. இப்படி நடந்திருப்பது  கட்சிக்குத்தான் கெட்ட பெயராக இருக்கும்.  இதற்கு நானும் ஏதாவது பதில் சொன்னால் அது கட்சிக்கு உகந்ததாக இருக்காது. அதனால் அது பற்றி நான் பேச விரும்பவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in