ஜெயலலிதாவிற்கு மட்டுமின்றி பாஜகவிற்கும் ஈபிஎஸ் துரோகம் செய்கிறார்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவிற்கு மட்டுமின்றி பாஜகவிற்கும் ஈபிஎஸ்  துரோகம் செய்கிறார்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 3000 ரூபாயும்,  பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாயும் அரசு நிவாரணமாக  வழங்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தலைச்சங்காடு திருவாலி, வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளச் சேதங்களை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று  நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறினார்.  பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும்  வழங்கினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக அரசும், மத்திய அரசும் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உதவிகளை வழங்க வேண்டும். பேரிடர் பாதித்த பகுதியாக மயிலாடுதுறையை அறிவிக்க வேண்டும். 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்.  தற்போது ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது  மிகவும் குறைவான தொகையாகும்.

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளபோது இரண்டு தாலுகாவிற்கு மட்டும் அளிக்காமல் மாவட்டம் முழுவதும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அப்போதைய   தமிழக அரசு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டாரோ அதையே தற்போது அவர் வழங்க வேண்டும். 

முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு மீதுள்ள கோபத்தில் திமுக அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.  ஆனால் திமுக அரசும் எடப்பாடி பழனிசாமி அரசு போல்தான் செயல்படுகிறது. பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு குறுகிய காலம் மட்டுமே கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாய சங்கங்கள் கூறியபடி கால அவகாசத்தை மேலும் நீட்டித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கியதுபோல் பயிர் இன்சூரன்ஸ் தொகையை தமிழக அரசே கட்ட வேண்டும். 

தற்போது அதிமுக தலைமை இல்லாத கட்சியாகவும், செயல்படாத நிலையிலும் உள்ளது. எடப்பாடி பழனிசாமியால் ஒரு இடைத்தேர்தல் வந்தால் கூட சின்னத்தை வழங்கும் படிவத்தில் கையெழுத்து போட முடியாது. அவரால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து மீண்டும் அவரை தேர்வு செய்ய நினைக்கிறார்.

நான்கு மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றார்.  ஆனால், அது முடியவில்லை. பொதுக்குழுவில் வாக்களித்த 2000 பேர் மட்டும் கட்சி அல்ல.  அதையும் தாண்டி லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.  இரட்டை இலை சின்னம் அங்கே உள்ளதால்தான் தொண்டர்கள் அங்கே உள்ளனர். தொடர்ந்து துரோகம் செய்வது வாடிக்கையாக கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை முதலமைச்சராக உருவாக்கிய எங்களுக்கு துரோகம் செய்தார். அவருடன் கூடவே இருந்த ஓபிஎஸ்சுக்கு துரோகம் செய்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குத் தான் பொதுச்செயலாளர் பதவி என்று சொல்லி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர்.

ஆனால் மீண்டும் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளார். அவர் ஆட்சியில் தொடர்வதற்கு உதவி செய்த பாஜகவிற்கும் துரோகம் செய்கிறார். அமித்ஷா வந்தால்,  நான் ஏன் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்பது துரோகத்தின் வெளிப்பாடு. தமிழக அரசியலில் இருந்து எடப்பாடி பழனி்சாமி அகற்றப்பட்டால்தான் ஜனநாயகம் தழைக்கும்"  என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in