மணிப்பூரின் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏன்?

மணிப்பூரின் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏன்?
தோங்காம் பிஸ்வஜித் சிங்

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டபோதும், அம்மாநில முதல்வர் யார் என்பதில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

என்.பீரேன் சிங் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது முந்தைய அரசில் அமைச்சராக இருந்த தோங்காம் பிஸ்வஜித் சிங்குக்கு அந்த வாய்ப்பு கிட்டுமா எனத் தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சித் தலைமை அழைத்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 15), மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் மணிப்பூர் மாநில பாஜக தலைவர் ஏ.சாரதாவும் டெல்லி சென்றார்.

போகும்போது மூவரும் ஒன்றாகச் சென்றாலும், வரும்போது பீரேன் சிங், சாரதா ஆகியோர் ஒரு விமானத்திலும், பிஸ்வஜித் மட்டும் தனியாக வேறொரு விமானத்திலும் மணிப்பூர் திரும்பினர். மூவரும் டெல்லி சென்றது வெற்றியைக் கொண்டாடத்தான் என்று இம்பால் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பிஸ்வஜித் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் சமயம் என்பதாலும், ஹோலி பண்டிகைக் காலம் என்பதாலும் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும்; இதுகுறித்து தன்னுடனோ அல்லது பீரேன் சிங்குடனோ பாஜக தேசியத் தலைவர்கள் யாரும் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியைச் சந்தித்த பீரேன் சிங்
பிரதமர் மோடியைச் சந்தித்த பீரேன் சிங்

மார்ச் 20-ல் முடிவு தெரியும்

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ இருவரும் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் எனும் முறையில் நாளை (மார்ச் 18) அல்லது நாளை மறுநாள் (மார்ச் 19) மணிப்பூர் சென்று 32 எம்எல்ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசி அவர்களது கருத்தைத் தெரிந்துகொள்ளவிருக்கிறார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மார்ச் 20-ம் தேதிவாக்கில் முதல்வர் யார் என முடிவுசெய்யப்படும் என மணிப்பூர் பாஜகவினர் கூறுகிறார்கள்.

பிரதமர் மோடியை பீரேன் சிங் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அவர்தான் மீண்டும் முதல்வராவார் எனப் பேச்சுக்கள் எழுந்தன. எனினும், சஸ்பென்ஸ் இன்னும் தொடர்வதற்குக் காரணம், பிஸ்வஜித் கொடுக்கும் அழுத்தம்தான் எனக் கருதப்படுகிறது. 2017 தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் பிஸ்வஜித் தான் என்பதால், இந்த முறை முதல்வர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார்.

மணிப்பூரில் ஆட்சியமைக்க 31 இடங்களே போதுமானவை என்ற நிலையில், 32 இடங்களில் வென்றிருக்கும் பாஜக பிற கட்சிகளுடன் கைகோத்து கூட்டணி அரசை அமைக்க விரும்புவதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in