பதவியை ராஜினாமா செய்தேனா?- அதிர்ச்சியடைந்த கேரள காங்கிரஸ் மாநிலத் தலைவர்!

சுதாகரன்
சுதாகரன்

கேரளத்தில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக இருக்கும் சுதாகரன் அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்து ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியதாக மலையாள ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் தகவல் பரவியது. இதை காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன் விடுத்துள்ள அறிக்கையில், `திடீர் உடல் நலக்குறைவு மற்றும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவதாகத் தகவல் பரவியது. அப்படி நான் ராகுல்காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதியதாகவும் சில ஊடகங்கள் வெளியிடுகின்றன. இது முழுக்க தவறானது. இன்னொன்று கட்சியின் விதிகள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும் அடிப்படைப் புரிதலும் இல்லாதவர்கள்தான் இப்படிக் கிளப்பி விட்டுள்ளனர். ஒருவேளை நான் அப்படிக் கடிதம் எழுதியிருந்தால் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்குத்தானே எழுதமுடியும். ராகுலுக்கு எழுதியதாக செய்தி பரப்பப்படுகிறது. இந்த வாதமே இது போலியானது என நிரூபிக்க போதும் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 9-ம் தேதி, கண்ணூரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஆதரித்து சுதாகரன் பேசியதாக சர்ச்சை எழுந்தது. கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்டக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன் ராஜினாமா கடிதம் அனுப்பியதாகத் தகவல் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in