கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில் பேரம் பேசினாரா திருமாவளவன்?

மீண்டெழுந்த சர்ச்சையும், வேகமடையும் விவாதங்களும்
மக்கள் கூட்டத்தின் மத்தியில் தொல்.திருமாவளவன்
மக்கள் கூட்டத்தின் மத்தியில் தொல்.திருமாவளவன்

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தாலும், இதுபோன்ற சம்பவங்களை உடனுக்குடன் தடுக்கவும், தண்டனை தரவும் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் தேவை என்ற குரல்கள் எழுந்திருக்கின்றன.

விசிக மீதான விமர்சனங்கள்

தீர்ப்பு வெளியான அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அதை வரவேற்றுப் பேட்டி கொடுக்க, ஒரு நாள் கழித்துத்தான் அறிக்கை வெளியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதற்குள்ளாக “இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட கட்சிதான் விசிக. ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாகத் திருமாவே பேரம் பேசினார்" என்றொரு தகவல் இணையத்தில் பரவியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விசிக சார்பில் 'மீண்டெழும் சாம்பலின் நீதி' என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிந்தனைச்செல்வன்
சிந்தனைச்செல்வன்

கருத்தரங்கின் நோக்கம் குறித்து உரையாற்றிய காட்டுமன்னார்கோயில் விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், "கண்ணகி முருகேசன் கொலை குறித்து திருமாவின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பிறகே அவர் அதை பிரஸ்மீட் வைத்து உலகறியச் செய்தார். கூடவே, சிபிஐ விசாரணையும் கேட்டார். இன்றைய தீர்ப்புக்கு அடிப்படை விசிகவின் கடுமையான களப்பணிதான்" என்றார். கூடவே, "இந்த வழக்கில் விசிக சமரசமாகப் போக முயன்றது என்று எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர் பொ.ரத்தினம் போன்றோர் மோசமான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். திருமாவளவனின் ஒரே சொத்து அவரது நற்பெயர்தான். அதை எரிப்பது அவரை உயிரோடு எரிப்பதைவிட கொடூரமானது" என்று பேசினார்.

அடுத்ததாக, இறந்த முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவையும், தம்பி பழனிவேலையும் இணையம் வழியாகப் பேச வைத்தார்கள். அப்போது திருமாவளவன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு சாமிக்கண்ணுவிடம் கேட்க, அவரும் திருமா பெயரைச் சொல்லி அன்றைய மாவட்டச் செயலாளர் கருப்புச்சாமி விருத்தாச்சலத்தில் ஒரு லாட்ஜுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது விசிக நிர்வாகிகள் சிலரும், பாமக நகரச் செயலாளரும் இருந்ததாகவும், இந்த வழக்கைச் சமாதானமாகப் பேசி முடித்துவிடலாம் என்று அவர்கள் பேசியதாகவும் சொன்னார். வயோதிகம் காரணமாக சாமிக்கண்ணுவுக்குச் சரியாகக் காது கேட்காததால் அவரது மகன் பழனிவேலு குறுக்கிட்டு, "அப்பாவுக்கு அப்போது திருமாவளவனை அடையாளம் தெரியாது. எனவே, கருப்புச்சாமியையே திருமாவளவன் பேசியதாகக் கருதிக்கொண்டார். நான்தான் விளக்கம் சொல்லி அவரை அங்கிருந்து அழைத்துவந்தேன்" என்றார்.

உணர்வுபூர்வமாகப் பேசிய திருமா

இதைத் தொடர்ந்து இணையத்தில் நேரடியாக சாமிக்கண்ணு, பழனிவேல் ஆகியோரிடம் திருமாவே பேசினார். "என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையா?" என்று அவர்களிடம் கேட்டார் திருமா. அதற்குப் பழனிவேல், "உங்களைத் தவறாகச் சொல்ல மாட்டேன். நீங்க இல்லாட்டி இந்த வழக்கை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கவே முடியாது" என்றார். மீண்டும் குறுக்கிட்ட திருமாவளவன், தன்னைப் பற்றி வழக்கறிஞர் ரத்தினம், ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் போன்றோர் சொல்கிற குற்றச்சாட்டு பற்றி கேட்டார். “உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நாங்கள் சென்னைக்கு வந்து உங்களைச் சந்திக்கிறோம். பிறகு பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று பழனிவேல் கூறினார். அதன் பிறகும் சமாதானமடையாத திருமா, "எழுதுகிறவனுக்கும் மனசாட்சி இல்லை, அவதூறு பரப்புகிறவர்களுக்கும் மனசாட்சி இல்லை. இந்த மாதிரி பிழைப்பு நடத்துகிறவன் நானில்லை. அதற்குத் தூக்குப் போட்டு சாகலாம். மருந்தைக் குடித்துவிட்டுச் சாகலாம். இப்படியெல்லாம் அவதூறு பரப்பினால் எப்படி எதிர்கொள்ள முடியும்?" என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார்.

சாமிக்கண்ணு, அவரது மகன் பழனிவேலு
சாமிக்கண்ணு, அவரது மகன் பழனிவேலு

‘அவதூறு பரப்புவது நல்லதல்ல!’

அடுத்துப் பேசிய 'எவிடன்ஸ்' கதிர், “ஒரு தலைவர் காயப்பட்டுப் பேசும்போது அந்தக் கருத்தரங்கிற்குப் பேசவரும் பேச்சாளர்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஆர்எஸ்எஸ், பாஜக எழுச்சி பெற்றுவரும் இந்தக் காலகட்டத்தில் அதை எதிர்க்கிற விசிக பற்றி இப்படி அவதூறு பரப்புவது நல்லதல்ல" என்றார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனும் தன்னுடைய பேச்சின் இறுதியில், “பொதுவுடமை இயக்கமோ, திராவிடர் கழகமோ இங்கே அவ்வளவு வலுவாக இல்லை. திமுக, அதிமுகவை திராவிட இயக்கமாக நான் கருதவில்லை. சாதி இருக்கும் வரையில் இதுபோன்ற ஆணவக் கொலைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால், தலித் இயக்கங்கள் வலுவாக இருந்தால் இதுபோன்ற தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்" என்றார்.

விசிக எம்பி-யான ரவிக்குமார் பேசும்போது, "விசிகவுக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்கறிஞர் அணி இருக்கிறது. இதுபோன்ற வழக்குகளை நாமே ஏற்று நடத்த வேண்டும். வெளி வழக்கறிஞர்களிடம் வழக்குகளை கொடுப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எவிடன்ஸ் போன்ற அமைப்புகளால் நிதி நல்கை இல்லாமல் இயங்க முடியாது. எனவே, அதுபோன்ற அமைப்பாக ஏன் விசிகவே மாறக்கூடாது என்றும் சிந்திக்க வேண்டும்" என்றார்.

‘என் மானம்தான் இயக்கத்தின் வலிமை’

இறுதியாகப் பேசிய திருமாவளவன், "என் மீதான அவதூறுகள் ஆதவன் தீட்சண்யா எழுதிய கட்டுரையில் இருந்து தொடங்கியதாக அறிகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு இயக்கத்தை நடத்துகிற திருமாவளவன் பற்றி ஒரு அவதூறு வந்தால், அது உண்மையா என்று கேட்க வேண்டாமா? ரத்தினம் சொன்னார் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு திருமாவளவன் இப்படிப்பட்டவர் என்று இவர்களே பரப்புவது அதிர்ச்சியைத் தருகிறது.

திண்ணியம் பிரச்சினையில் இப்படித்தான், 'விசிகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகப் பேசினார்' என்று ரத்தினம் என்னிடம் கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பே, 'திருமாவும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகப் போய்விட்டார்' என்று துண்டறிக்கை போட்டு ஊரெல்லாம் கொடுத்தார். மோடி, அமித் ஷா போன்றோர்களை அம்பலப்படுத்துவதைவிட திருமாவை அம்பலப்படுத்துவதுதான் அவர்களது இலக்கு என்றால் அவர்களது சிந்தனை எந்த நோக்கில் இயங்குகிறது? ரத்தினத்தோடு எனக்கு எந்த முரண்பாடும் இல்லை, அவரைப் பற்றி நான் யாரிடமும் குறை சொன்னது கூட இல்லை. அப்படியிருந்தும் தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக என்னை விமர்சிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

இங்கே நான் இவ்வளவு தூரம் விளக்கம் தருவதற்குக் காரணம், ஏதாவது தவறு நடந்திருக்குமோ என்று நம்முடைய கட்சித் தோழர்களுக்கு எந்த மயக்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். என்னுடைய மானம்தான் இந்த இயக்கத்தின் வலிமையாக இருக்கிறது. காசுக்காக, பதவிக்காக ஒடுக்கப்பட்ட மக்களை அடமானம் வைக்கிற நிலை எனக்கு எந்தக் காலத்திலும் ஏற்படாது" என்று பேசினார்.

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யாவுக்கு அழுத்தம்

இந்தக் கருத்தரங்கு முடியும்போது இரவு 9.30 மணி. அதோடு பிரச்சினை ஓயும் என்று பார்த்தால், இந்த வீடியோவில் முருகேசனின் தந்தை பேசியதையும், திருமாவளவன் எழுப்பிய கேள்விகளையும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் 'டேக்' செய்து, "முருகேசன் குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துவிட்டார்கள். நீங்கள் செய்தது கள ஆய்வா, கள்ள ஆய்வா?" என்று பதிவிட ஆரம்பித்துவிட்டார்கள் விசிகவினர்.

இதுகுறித்து ஆதவன் தீட்சண்யாவின் கருத்தைக் கேட்பதற்காக 'காமதேனு' சார்பில் அவரைத் தொடர்பு கொண்டோம். "18.2.2007 அன்று உண்மை அறியும் குழுவில் ஒருவனாக நான் முருகேசனின் வீட்டிற்குச் சென்றேன். 'அந்தக் குடும்பத்துக்கு கடுமையான நெருக்கடி தருகிறார்கள். பல்வேறு தளங்களில் செயல்படுபவர்கள் எல்லாம் ஒரு குழுவாகப் போய் வந்தால் அவர்களுக்கு உளவியல் ரீதியாகப் பலம் கிடைக்கும்' என்று வழக்கறிஞர் பொ.ரத்தினம் சொன்னார். சம்பவம் நடந்த இடத்தைப் பார்த்துவிட்டு, நேரில் கண்டவர்களிடமும் பேசிவிட்டு வந்தோம். அங்கு சென்று வந்ததில் இருந்து நான் ரெஸ்ட்லெஸ் ஆகிவிட்டேன். அந்த அனுபவத்தை, வலியை, வேதனையை 'சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டேன். நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியாக,

‘இதுக்கிடையில விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவளவன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். ‘கேஸ் அது இதுன்னு விஷயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார்’ என்று அய்யாச்சாமி சொன்னதையும், ‘வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெடுக்கணும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கீலுக்கு நடுவுல என்ன வேலை? நீங்களே முடிவெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வருமான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன்’ என்று சாமிக்கண்ணு சொன்னதையும் பதிவு செய்திருந்தேன்.

2007-ல் நான் எழுதிய இந்தக் கட்டுரை எனது 'புதுவிசை' பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது விசிகவினர் அதற்கு மறுப்பு சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அதன்பிறகு மலேசியாவில் நடந்த பன்னாட்டு பகுத்தறிவாளர் மாநாட்டில் தோழர் திருமாவை நேரில் சந்தித்தேன். அப்போதுகூட எனது கட்டுரை குறித்து திருமாவிடம் நேரிலேயே முறையிட்டார்கள் சில தோழர்கள். 'களத்தில் இருந்து கிடைக்கிற தகவல்களின் அடிப்படையில் சில முடிவுகளை நான் எடுக்கிறேன். எல்லாம் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எங்கள் செயல்பாடு பற்றி தூரத்தில் இருந்து விமர்சிக்கிறார்களே தவிர, பக்கத்தில் வந்து யாரும் ஆலோசனை சொல்வதில்லை' என்றார் திருமா.

அந்தச் சந்திப்பின் அடிப்படையில், 'கண்டேன் களைப்படைந்த என் தோழனை' என்று ஒரு கட்டுரையும் எழுதினேன். இதெல்லாம் முடிந்துபோன விஷயம். இந்த நேரத்தில் கண்ணகி முருகேசன் வழக்கில் தீர்ப்பு வந்ததும் அந்தச் சம்பவம் குறித்து தெரிந்துகொள்ள இணையத்தில் பலர் தேடியிருக்கிறார்கள். அப்போது என்னுடைய பழைய கட்டுரை மேலே வந்துவிட்டது. அன்றைய என்னுடைய நிலைப்பாடு வேறு, இன்றைய நிலைப்பாடு வேறு. நான் அன்று நேரில் கேட்டறிந்ததை மனசாட்சியுடன் பதிவு செய்திருக்கிறேன். அதைப் பொய் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மைதான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படும். இதற்காகத்தான் பாஜகவினர் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். எனவே, நான் அந்த மாதிரியான கட்டத்தை நோக்கிப் போக வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே, திருமாவுக்கே அந்த ஆதாரங்களைத் தனியாக அனுப்பிவைக்கலாம் என்றிருக்கிறேன்" என்றார்.

பொ.ரத்தினம்
பொ.ரத்தினம்

‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்’

வழக்கறிஞர் பொ.ரத்தினத்திடம் கேட்டபோது, "முதலில் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்குத் தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். விசிக தலைவருக்கும் சரி, அதன் முக்கிய நிர்வாகிகளுக்கும் சரி... அந்த ஒழுக்கம் கிடையாது. கண்ணகி முருகேசன் கொலை தொடர்பாக, திருமாவளவனும், அவரது கட்சிக்காரர்களும் பேரம் பேசியதும், வழக்கைத் திரும்பப்பெற முயன்றதும் உண்மை. இதுகுறித்து அன்று கம்யூனிஸ்ட்களும் கடுமையாகக் கண்டித்துப் பேசினார்கள். இன்றைய மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவருக்கும் இந்த விவகாரம் தெரியும். கூட்டணி தர்மத்துக்காக இன்று அவர்கள் அமைதி காக்கிறார்கள்.

இந்த இணைய கருத்தரங்கை நடத்தியதற்கு முந்தைய நாள்கூட, சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ நேரடியாக முருகேசன் வீட்டிற்குப் போய் அவரது தந்தை, தம்பியிடம் திருமாதான் இந்தத் தீர்ப்புக்குக் காரணம் என்று பேசும்படியும், திருமா மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும்படியும் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் உடனே எனக்கு இந்தத் தகவலைச் சொல்லிவிட்டார். உலக வரலாற்றிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு அமைப்பைத் தொடங்கிவிட்டு அவர்களுக்கே துரோகம் செய்கிற அமைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்த ஒரு விஷயத்தைச் சொன்னதற்கே இவ்வளவு கோபப்படுகிறார்களே? திண்ணியம் வழக்கு, சென்னகரம்பட்டி இரட்டைக்கொலை வழக்கு போன்றவற்றில் இவர்கள் நடந்துகொண்ட விதம், பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் காதலைப் பிரிப்பதற்காக இவர்கள் நடத்திய கட்டப்பஞ்சாயத்து என்று எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆவார்கள்?" என்று முடித்துக்கொண்டார்.

‘சகோதர யுத்தம் என்றுமே நன்மை செய்யாது’ என்பதை இரு தரப்பினரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே, நடுநிலையாளர்களின் அவா. பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in