அமைச்சரை மிரட்டினாரா ஒன்றிய செயலாளர்?- நடந்தது என்ன?

அமைச்சரை மிரட்டினாரா ஒன்றிய செயலாளர்?- நடந்தது என்ன?
அனிதா ராதாகிருஷ்ண

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, கட்சியின் ஒன்றிய செயலாளர் ஒருவர் மிரட்டுவதாகவும், ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சிப்பதாகவும் சமூகவலைதளங்களில் ஆடியோ ஒன்று இப்போது வைரல் ஆகிவருகிறது. அந்த ஒன்றிய செயலாளரின் பதவி பறிக்கப்பட்டு, இப்போது குண்டர் சட்டத்தில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். இது நடந்து நான்கு மாதங்கள் ஆகிய நிலையில், ஆடியோ இப்போது வைரல் ஆகிவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், பத்மநாபமங்கலம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் சிவகாமி. இவரது கணவர் வைகுண்டம் இதே ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ளார். பத்மநாபமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வேண்டப்பட்டவர்கள் சிவா ப்ளூ மெட்டல்ஸ் என்னும் பெயரில் குவாரி ஒன்றை நடத்திவந்தனர். அதற்கு ஊராட்சி அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன், வைகுண்டத்திற்கு போன் செய்துள்ளார். அப்போது அவர், “ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் இருபது லட்சம் கேட்கிறாயாமே? நான் நினைத்தால் உன் ஊராட்சியையே ஏலம் போட்டு எடுத்தப் பதவி எனச் சொல்லி களைத்துவிடுவேன். கோர்ட்டுக்குப் போய் களைத்து விடுவேன். ஜட்ஜே எனக்கு வேண்டப்பட்டவர்தான்” என்கிறார்.

அதற்கு வைகுண்டம், “ நான் பணம் கேட்கவே இல்லையே” என்று சொல்வதுடன், “சரிங்க அண்ணாச்சி... சரிங்க அண்ணாச்சி” என்று அனிதாவிடம் பவ்யமாகப் பேசுகிறார். ஒருகட்டத்தில் வைகுண்டமும் டென்ஷன் ஆகி, “நானும் ஒருகோடி ரூபாய் செலவு செய்துதான் ஒன்றியச் செயலாளர் ஆகியிருக்கிறேன். உன்னால் முடிந்ததை நீ செய்” என்று சொன்னதோடு அனிதா ராதாகிருஷ்ணனை கெட்ட வார்த்தைகளிலும் அர்ச்சனை செய்கிறார். இது நடந்த சிலமாதங்களிலேயே வைகுண்டத்தின் ஒன்றிய செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இப்போது வைகுண்டம் குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் நிலையில் அமைச்சருக்கும், அவருக்கும் இடையேயான அந்த உரையாடல் ஆடியோவாக வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களிடம் கேட்டால், “இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள். அந்த ஆடியோ உரையாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது அனிதா எம்எல்ஏவாக மட்டுமே இருந்தார். சிவராமன் என்பவரைக் கொலை செய்ய முயற்சித்ததாலும், வேறு சில வழக்குகளுக் காகவும் வைகுண்டம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக சிறையில் உள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்போது இந்த ஆடியோவை யாரோ ரிலீஸ் செய்து, வைரல் ஆக்கியுள்ளனர்” என்கிறார்கள்.

எது எப்படியோ, திமுக அமைச்சர்களிலேயே அடுத்தடுத்து சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in