காய் நகர்த்திய ஓ.பி.எஸ்: அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைக்க வாய்ப்பு?

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சென்னையில் நடக்கும் அதிமுகவின் பொதுக்குழுவை புறக்கணித்த ஒ.பன்னீர் செல்வம், ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்குள் தன் ஆதரவாளர்களுடன் புகுந்துள்ளார். இது ஓ.பி.எஸின் தவறான முடிவு என்று ஒருதரப்பும், தெளிவான காய்நகர்த்தல் என மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றது.

அதிமுக பொதுக்குழு இன்று வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்துவருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்த ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடைகோரி வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கில் தனக்கு சாதகமாகத் தீர்ப்பு வராது என்பதையும் ஓ.பன்னீர் செல்வம் உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் நேரே தன் ஆதரவாளர்களுடன் தலைமைக்கழகம் நோக்கிச் சென்றார். ஒருவேளை ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவுக்குச் சென்றிருந்தாலும், அவருக்கு பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஆதரவு இல்லாததால் இதற்கு முன்பு நடந்த பொதுக்குழு போல் அவமானப்பட வேண்டி இருக்கும். அல்லது அமைதியாக விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இரண்டிலும் உடன்படாத நிலையில்தான் ஓ.பன்னீர் செல்வம் தலைமைக்கழகம் நோக்கிச் சென்றதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தலைமைக்கழகத்தின் முன்பு நின்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருகட்டத்தில் ஓ.பி.எஸ் கை ஓங்க, அவர் தலைமைக்கழகத்திற்குள்ளும் கதவை உடைத்த தன் ஆதரவாளர்கள் துணையோடு சென்றார். அந்தப் பகுதியே போர்க்களமான நிலையில் ராயப்பேட்டையில் அதிமுக தலைமைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தலைமை கழகத்தைக் கைப்பற்றிய அதேநேரத்தில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதில் ஓ.பன்னீர் செல்வத்தின் காய்நகர்த்தல்கள் பற்றிப் பேசிய சட்டவல்லுனர்கள் சிலர், “பொதுக்குழுவுக்கு போயிருந்தால் ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை இன்னும் மோசமாகி இருக்கும். தலைமைக்கழகம் சென்றது அதிமுகவில் அவருக்கு இருக்கும் இடத்தின் உரிமப்போரின் ஒரு அங்கம். அவர் பொதுக்குழுவை புறக்கணித்து தலைமை அலுவலகம் சென்றதால் தான் அதிமுக தலைமையகம் யாருக்குச் சொந்தம் என்பதை விசாரித்து முடிவெடுக்க தமிழக அரசே குழு அமைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. இப்போது இதை இப்படி அணுகுங்கள். பொதுக்குழுவில் பெரும்பான்மை இல்லாதவர், தலைமையகத்தையே கைப்பற்றியிருக்கிறார். இது ஓ.பன்னீர் செல்வத்தின் தெளிவான அரசியல் பார்வைதான். அவர் மற்றவர்களை குழப்பி, அவர் தெளிவாகவே பயணிக்கிறார். அலுவலகத்தை இருதரப்பும் உரிமை கொண்டாடுவதால் சீல் வைக்கும் வாய்ப்பு அதிகம். அந்தவகையில் ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்தை மையமாக வைத்து அடுத்த அரசியலைத் தொடரவாய்ப்பு அதிகம்!” என்றார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in