`சோழர்கள், பாண்டியர்களின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை'- அமித்ஷா ஆதங்கம்

விழாவில் உரையாற்றும் அமித்ஷா
விழாவில் உரையாற்றும் அமித்ஷா

``முகலாயர்களுக்கு வரலாற்று ஆசிரியர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை, பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், மௌரியர்கள், குப்தர்கள் மற்றும் அஹோம்கள் போன்ற பேரரசுகளுக்கு கொடுக்கவில்லை. இதனால் இந்தியாவின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்போது அதை மாற்றி எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடத்த எழுத்தாளர் ஓமேந்திரா ரத்னுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித் ஷா, “நமது வரலாற்றைத் திரித்தவர்கள் செய்ய வேண்டியதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நம்மை யார் தடுக்க முடியும். வரலாறு அரசாங்கத்தின் அடிப்படையில் எழுதப்படுவதில்லை. அது உண்மைகளின் அடிப்படையில் எழுதப்படுகிறது. சரித்திரம் என்பது வரலாற்றுப் புத்தகங்களால் மட்டும் வரையறுக்கப்படவில்லை. அதன் சொந்த ஒளியுடன் வெளிச்சம் பரப்புகிறது. உலகத்தின் முன் நாம் பெருமையுடன் நிற்க வேண்டிய தருணம் இது. பல தசாப்தங்களுக்குப் பிறகு நமது கலாச்சாரம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இந்தியாவில் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் முகலாய ஆட்சியைப் பற்றி பதிவுசெய்வதில் மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஆனால் பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது, அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அசாமை ஆண்டது, அவர்கள் ஔரங்கசீப்பை தோற்கடித்து அசாம் இறையாண்மையை தக்க வைத்துக் கொண்டனர். பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மௌரியர்கள் ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை முழு நாட்டையும் 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சத்வாகனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்த பேரரசர் சமுத்திரகுப்தர் முதல் முறையாக ஒரு ஐக்கிய இந்தியாவைக் கற்பனை செய்தார். ஆனால் இவற்றைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றுப் புத்தகங்களில் இல்லை'' என்று கூறினார்.

மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை முன்னோக்கி கொண்டு வர வேண்டும். இதனால் படிப்படியாக தவறு என்று நாம் நினைக்கும் வரலாறு மறைந்துவிடும். உண்மை வரலாறு அறியப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in